நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்பு விழாவிற்கு நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப்பச்சன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சல்மான் கான், பாடகி லதா மங்கேஷ்கர் ஆகியோருக்கும் அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளது என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மே 26ஆம் தேதி நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சுமார் 2,500 பேர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அனைத்து நாடாளுமன்ற மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்களும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிது. இவர்களது எண்ணிக்கை 777. முன்னாள் குடியரசுத் தலைவர்கள் பிரதீபா பாட்டீல், அப்துல் கலாம் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் மன்மோகன் சிங் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோடியின் தாயார் ஹிரபென் மற்றும் மோடியின் 3 சகோதரர்களும் கலந்துகொள்ளலாம் என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. பதவியேற்கும் பிரதமர் மோடி 20 விருந்தாளிகளை அழைக்கலாம். பதவியேற்கும் அமைச்சர்கள் தலா 4 விருந்தாளிகளை அழைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.