இந்தியா

விபத்துக்கு குழந்தையின் தந்தையே காரணம்: ஹேமா மாலினி

செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர் கார் விபத்தில் குழந்தை பலியானத்துக்கு போக்குவரத்து விதிகளைப் பின்பற்றாத அக்குழந்தையின் தந்தையே காரணம் என்று நடிகை ஹேமா மாலினி கூறியுள்ளார்.

இது குறித்து நடிகையும், பாஜக எம்.பி.யுமான ஹேமா மாலினி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடும்போது, "விபத்தில் அநியாயமாக குழந்தை பலியானதும், குழந்தையின் உறவினர்கள் காயமடைந்ததும் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்திவிட்டது.

கார் ஓட்டி வந்த குழந்தையின் தந்தை போக்குவரத்து விதிகளை பின்பற்றியிருந்தால் இந்த விபத்தே நடந்திருக்காது" என்று ஹேமா மாலினி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2-ம் தேதி இரவு ராஜஸ்தான் மாநிலம் தவுசா என்ற இடத்தில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தபோது, ஹேமா மாலினியின் பென்ஸ் காரும் எதிரே வந்த மாருதி ஆல்டோ காரும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் எதிரே வந்த காரில் இருந்த 4 வயது பெண் குழந்தை பரிதாபமாக பலியானது. அதே காரிலிருந்த குழந்தையின் தந்தை, 2 பெண்கள், மற்றுமொரு குழந்தை காயங்களுடன் உயிர் தப்பினர்.

ஹேமா மாலினிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பாக நடிகை ஹேமா மாலினியின் கார் ஓட்டுநர் மகேஷ் தாக்கூரை, அதிவேகத்தில் வந்ததாக போலீஸார் கைது செய்து, விபத்தில் சிக்கிய 2 கார்களையும் பறிமுதல் செய்தனர். ஓட்டுநர் மீது கொலை வழக்கு எதுவும் பதிவு செய்யப்படாத நிலையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜாமீன் பெற்றது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT