சீமாந்திரா பகுதியின் முதல் முதல்வராக, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு திருப்பதியில் பதவியேற்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சீமாந்திராவில் மொத்தமுள்ள 175 சட்டமன்ற தொகுதிகளில், 102 இடங்களை கைப்பற்றி தெலுங்கு தேசம் தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானா தனி மாநிலம் வரும் ஜூன் 2-ம் தேதி முதல் அதிகாரபூர்வமாக செயல்படவுள்ளது. இதனால் இரு மாநில முதல்வர்களின் பதவியேற்பு விழா ஜூன் 2-ம் தேதி அல்லது அதற்குப் பிறகு நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சீமாந்திரா முதல்வராக சந்திரபாபு நாயுடு, தனது சொந்த ஊர் உள்ள சித்தூர் மாவட்டம் திருப்பதியில் பதவியேற்க உள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
சீமாந்திராவின் புதிய தலைநகர், தொழில்துறை வளர்ச்சி, விவசாய கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி, வீட்டுக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பு, விவசாயத்துக்கு 7 மணி நேரம் இலவச மின்சாரம் போன்ற வாக்குறுதிகள், நாயுடுவை முதல்வராக்கி உள்ளது. கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் காப்பாற்றுவேன் என அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.