நாட்டை உலுக்கியுள்ள `வியாபம்’ முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணையைத் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக நேற்று இரண்டு, முதல் தகவல் அறிக்கைகளை (எஃப்ஐஆர்) பதிவு செய்துள்ளது.
வியாபம் வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து விசாரணை யைத் தொடங்கியுள்ள சிபிஐ, 2010-ம் ஆண்டு மருத்துவ நுழைவுத் தேர்வு, 2011-ம் ஆண்டு முதுநிலை நுழைவுத் தேர்வுகள் தொடர்பாக இரண்டு முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்துள்ளது.
2010- மருத்துவ நுழைவுத் தேர்வு தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் 21 தேர்வர்களின் பெயரைச் சேர்த்துள்ள சிபிஐ அவர்கள் மீது குற்றச்சதி, ஏமாற்றுதல், மோசடி செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது.
இதில், குலாப் சிங் கிரார் என்ற எம்.பி. மற்றும் அவரது மகன் சக்தி சிங் ஆகியோரின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
மத்தியப் பிரேதச காவல் துறையின் சிறப்பு புலனாய்வுக் குழுவிடமிருந்து வியாபம் வழக்கு விசாரணையை கடந்த திங்கள் கிழமை முழுமையாக எடுத்துக் கொண்டது சிபிஐ. வியாபம் முறைகேட்டில் தொடர்புடையவர் களில் 49 பேர் சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இணை இயக்குநர் ஆர்.பி. அகர்வால் தலைமையில் 40 பேர் அடங்கிய விசாரணைக்குழுவை சிபிஐ நியமித்துள்ளது.