தன்னை ஜூலை 30-ம் தேதி தூக்கிலிட வகை செய்யும் உத்தரவை எதிர்க்கும் யாகூப் மேமன் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதேவேளையில், அவரது கருணை மனுவை மகாராஷ்டிர ஆளுநர் நிராகரித்தார்.
இந்த மனு இன்று நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வின் விசாரணைக்கு வந்தது.
யாகூப் மேமன் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், தூக்குத் தண்டனை நிறைவேற்ற உத்தரவில் எந்தவித சட்ட நடைமுறைத் தவறுகளும் இல்லை.
மேலும், குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்த பிறகு, யாகூப் மேமன் அதனை எதிர்த்து நீதிமன்றத்திடம் முறையீடு செய்யவில்லை. மேமனின் கியூரேட்டிவ் மனுவை உச்ச நீதிமன்றத்தின் 3 மூத்த நீதிபதிகள் நிராகரித்தது சரியே.
தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவைப் பெற்ற பிறகு யாகூப் மேமன் அனைத்து சட்ட உதவிகளையும் பெறும் அளவுக்கு கால அவகாசம் இருந்துள்ளது. ஜூலை 13, 2015-ல் மேமனுக்கு அளிக்கப்பட்ட தூக்கிலிடப்படும் உத்தரவு அவருக்கு போதுமான கால அவகாசத்தை அளித்ததாகவே கோர்ட் கருதுகிறது.
ஆளுநரிடமோ, குடியரசுத் தலைவரிடமோ அளிக்கப்பட்டுள்ள கருணை மனு குறித்து தாங்கள் பரிசீலிக்க எதுவும் இல்லை என்று கூறிய உச்ச நீதிமன்றம், குற்றவாளி செய்யும் இத்தகைய முயற்சிகள் நீதித்துறை நடைமுறைகள் மீது தாக்கம் செலுத்தாது.
நீதிபதி குரியன் ஜோசப் முன்னதாக, யாகூப் மேமன் கியூரேட்டிவ் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் அமர்வின் முடிவில் சட்ட நடைமுறை தவறுகள் இருப்பதாகச் சுட்டிக் காட்டியுள்ளது பற்றி கருத்து கூறிய நீதிபதிகள், "கியூரேட்டிவ் மனு தள்ளுபடி செய்யப்பட்டது சரியே என்பதாகவே கோர்ட் பார்க்கிறது. அதில் நடைமுறை தவறுகள் இருப்பதாகத் தெரியவில்லை" என்று கூறியது.
கியூரேட்டிவ் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் மூத்த நீதிபதிகள் எனவே அதன் மீது தவறுகள் காண முடியாது என்ற அட்டர்னி ஜெனரல் வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதாக நீதிபதி மிஸ்ரா தெரிவித்தார்.
மகாராஷ்டிர ஆளுநரிடம் மேமன் அளித்த 2-வது கருணை மனு குறித்து நீதிமன்றம் எதுவும் கூற விரும்பவில்லை. என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, உடனடியாக மகாராஷ்டிர மாநில ஆளுநர், யாகூப் மேமன் கடந்த வாரம் செய்திருந்த கருணை மனுவை நிராகரித்தார்.
முன்னதாக, இன்று புதிதாக ஒரு கருணை மனுவை குடியரசுத் தலைவருக்கு யாகூப் மேமன் அனுப்பினார்.
மரபுப்படி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த மனுவை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆய்வுக்காக அனுப்பி வைப்பார். உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைக்கேற்ப குடியரசுத் தலைவரின் முடிவு அமையும்.
கடந்த ஆண்டு யாகூப் மேமன் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு தாக்கல் செய்தபோது அவரது மனுவை மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முந்தையச் செய்திப் பதிவுகள்:
கடந்த 93-ம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய யாகூப் மேமனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, அவரது தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இதையடுத்து, நாக்பூர் மத்திய சிறையில் வரும் 30-ம் தேதி அவர் தூக்கிலிடப்பட உள்ளார்.
இந்த உத்தரவுக்கு தடை கோரி, யாகூப் மேமன் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அனில் தவே, குரியன் ஜோசப் அடங்கிய அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி குரியன் ஜோசப் புதிய பிரச்சினை ஒன்றை எழுப்பினார்.
'யாகூப் மேமனின் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டபோது, சீராய்வு மனுவை விசாரித்த நீதி பதிகள் அனைவருக்கும் மனுவின் நகல் வழங்கப்பட வேண்டும் என்பது சட்ட விதிமுறை. இந்த சட்ட விதிமுறையை மத்திய அரசு ஏன் பின்பற்றவில்லை. சீராய்வு மனுவை அனில் தவே, சலமேஸ்வர் மற்றும் நான் அடங்கிய அமர்வு விசாரித்தது.
மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டபோது, என்னையும் நீதிபதி சலமேஸ்வரையும் விசாரணை அமர்வில் சேர்க்கவில்லை. தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர், அனில் தவே அடங்கிய அமர்வு மறுசீராய்வு மனுவை விசாரித்து தள்ளுபடி செய்துள்ளது. இந்த வழக்கில் விதிகள் மீறப்பட்டுள்ளது குறித்து, மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி, 'மறு சீராய்வு மனு குறித்து ஏற்கெனவே விசாரித்து தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டது. இப்போது, தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது குறித்த விவகாரம் மட்டுமே நீதிமன்றத்தின் முன் உள்ளது. வேறு எதையும் இப்போது விவாதிக்க இடமில்லை' என்று வாதிட்டார்.
இதையடுத்து, நீதிபதிகள் இருவரும் முரண்பட்ட தீர்ப்பை அளித்தனர். நீதிபதி குரியன் ஜோசப், 'யாகூப் மேமன் தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை விதித்ததுடன், மறுசீராய்வு மனுவை மீண்டும் விதிமுறைகளின்படி, விசாரிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.
இதை ஏற்காத மற்றொரு நீதிபதி அனில் தவே, 'தூக்கு தண்டனைக்கு தடை விதிக்க முடியாது. மகாராஷ்டிர மாநில ஆளுநர் முன் தாக்கல் செய்யப்பட்டுள்ள கருணை மனு மீது அவர் ஜூலை 30-ம் தேதிக்கு முன்போ, பின்போ முடிவெடுக்கலாம்' என்று உத்தரவிட்டார்.
நீதிபதிகள் இருவரும் முரண்பட்ட தீர்ப்பளித்ததால் 2 தீர்ப்புமே செல்லாது என்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து, இரு நீதிபதிகளும் இணைந்து வழக்கை கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்ற வலியுறுத்தி தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, தலைமை நீதிபதி உத்தரவின் பேரில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பி.சி.பந்த், அமிதவாராய் அடங்கிய அமர்வு இந்த வழக்கை இன்று விசாரித்தது.