சாமியார் அசரம் பாபு மீதான சிறுமி பலாத்கார வழக்கில், முக்கிய சாட்சி மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சாமியார் அசரம் பாபுவுக்கு (74), இந்தியாவில் 400-க்கும் மேற்பட்ட ஆசிரமங்கள் உள்ளன. வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள் உள்ளன. இவர் தனது ஆசிரமத்தில் சிறுமியை பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து அசரம் பாபுவை கடந்த 2013-ம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் முக்கிய சாட்சி கிரிபால் சிங் (35). கடந்த 3 மாதங்களுக்கு முன்னர்தான் இவருடைய வாக்கு மூலத்தை போலீஸார் பதிவு செய்தனர்.
இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இரவு ஷாஜகான்பூர் மாவட்டம் புவாயன் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் சிலர், கிரிபால் சிங் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பினர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார், சிங்கை மீட்டு பரேலியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “சிங்கின் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளது. மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய பிறகு, அசரம் பாபுவுக்கு எதிராக சாட்சி சொன்னால் அவ்வளவுதான் என்று மிரட்டிவிட்டு சென்றுள்ளனர்” என்றனர். மர்ம நபர்களை பிடிக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மாநகர கூடுதல் நீதிபதியிடம் கிரிபால் சிங் அளித்த வாக்குமூலத்தில், “அசரம் பாபுவின் ஆட்கள் கடந்த சில நாட்களாகவே எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தனர்” என்று கூறியுள்ளார். போக்குவரத்து சேவை நிறுவனத்தில் கிரிபால் சிங் வேலை செய்கிறார். அந்த நிறுவனத்தின் உரிமை யாளருடைய மகள் கூட, சாமியார் அசரம் பாபு மீது பாலியல் பலாத்கார புகார் கொடுத்துள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகில் உள்ள தனது ஆசிரமத்தில் அசரம் பாபு பலாத்காரம் செய்த தாக அவர் கூறியுள்ளார். அதன் பின் அசரம் பாபு ஜோத்பூர் சிறை யில் அடைக்கப்பட்டார். குஜராத் மாநிலம் சூரத்தில் 2 சகோதரிகளை பலாத்காரம் செய்ததாக அசரம்பாபு மற்றும் அவரது மகன் நாராயண் சாய் ஆகியோர் மீது போலீஸார் மற்றொரு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அசரம் பாபு மீதான வழக்கில் முக்கிய சாட்சிகள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வருகின்றன. ஏற்கெனவே சாமியாரின் சமையல்காரர் ஒருவர் உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் கடந்த ஜனவரி மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுவரை 9 சாட்சிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் 2 பேர் இறந்துள்ளனர் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.