இந்தியா

ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய வழக்கில் தொடர்புடைய கர்நாடக லோக் ஆயுக்தா நீதிபதி மகன் கைது

செய்திப்பிரிவு

கர்நாடகாவைச் சேர்ந்த அரசு அதிகாரி எம்.என்.கிருஷ்ணமூர்த்தி கடந்த மே 7-ம் தேதி லோக் ஆயுக்தா போலீஸாரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், “தற்போது லோக் ஆயுக்தா நீதிபதியாக இருக்கும் பாஸ்கர் ராவின் மகன் அஸ்வின் ராவ், கடந்த மே 4-ம் தேதி என்னை சந்தித்தார். அப்போது ரூ.1 கோடி தர வேண்டும். இல்லையென்றால் எனது வீட்டில் சோதனை நடத்தப்படும் என மிரட்டினார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறி இருந்தார்.

இதேபோல அஸ்வின் ராவ் முக்கிய அதிகாரிகள், பிரமுகர்களை மிரட்டி ரூ.100 கோடிக்கும் அதிகமாக ஊழல் செய்ததாக புகார் எழுந்தது. இதற்கு பல லோக் ஆயுக்தா அதிகா ரிகள் உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை விசாரிக்க, கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வுப் பிரிவை நியமித்தது.

இதையடுத்து, சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரி கமல் பாண்ட் தலைமையிலான போலீஸார் அஸ்வின் ராவ் மீதான குற்றச்சாட்டை விசாரித்து, கடந்த ஜூலை 1-ம் தேதி வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் அஸ்வின் ராவ் மற்றும் 13 அதிகாரிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் அடுத்த சில தினங்களில் லோக் ஆயுக்தாவின் 5 முக்கிய அதிகாரிகளை சிறப்புப் புலனாய்வு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

சிறப்பு புலனாய்வு பிரிவு இணை ஆணையர் சையத் ரியாஸ் நேற்று முன்தினம் இரவு ஆந்திர மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள அஸ்வின் ராவின் சொந்த ஊரில் அவரை கைது செய்தார். உடனடியாக அவரை ஹைதராபாத் அழைத்து வந்து, ரகசிய இடத்தில் வைத்து மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினார்.

இதையடுத்து அஸ்வின் ராவை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் பெங்களூரு அழைத்து வந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT