துருக்கி விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த மிரட்டலை அடுத்து, விமானம் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
தாய்லாந்தின் தலைநகர் பாங்காங்க் விமான நிலையத்திலிருந்து துருக்கி நாட்டு விமானம் ஏ-330 148 பயணிகளுடன் துருக்கியின் முக்கிய நகரான இஸ்தான்புல் நோக்கி பயணித்தது.
இந்திய வான் எல்லையில் விமானம் இருந்தபோது, அதில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலை அடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இது குறித்து டெல்லியில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் கூறும்போது, "நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, அதன் சரக்கு பெட்டகத்தில் வெடிகுண்டு இருப்பதாக விமான கழிவறையில் உள்ள கண்ணாடியில் வாசகம் எழுதப்பட்டிருந்ததை விமானி பார்த்து தகவல் அளித்தார்.
அந்த மிரட்டல் லிப்ஸ்டிக்கால் எழுதப்பட்டிருந்தது. இதனால் விமானம் மதியம் 1 மணிக்கு அவசரமாக தரையிறக்கப்பட்டது" என்றார்.
இதனை அடுத்து விமானத்தில் உள்ள பயணிகள் அனைவரிடமும் தனித் தனியே சோதனை நடத்தப்பட்டது. தேசிய பாதுகாப்புபடையினரும் விமானத்தில் சோதனை நடத்தி வருவதாகவும், விமானத்தில் வெடிகுண்டு இல்லை என்றும் சிவில் விமான போக்குவரத்துக்கான இணை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்தார்.
பயங்கரவாத எதிர்ப்பு படை பிரிவு வீரர்களும் விமான நிலையத்தில் குவிக்கப்பட்டதால் விமான நிலையம் பரபரப்புடன் காணப்பட்டது. சுமார் 3 மணி நேரத்துக்கு டெல்லி சர்வதேச விமான நிலையம் பாதுகாப்பு படையினரின் வளைவுக்குள் கொண்டுவரப்பட்டதால் பயணிகள் பீதி அடைந்தனர்.