மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அசோக் சவாண், தன் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை வியாழக்கிழமை ராஜினாமா செய்தார். எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் இம்முடிவை அவர் எடுத்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் நான்டெட் தொகுதியில் போட்டியிட்ட சவாண் 81, 455 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளரான டி.பி.பாட்டிலைத் தோற்கடித்தார். நான்டெட் மாவட்டத்தின் போகார் தொகுதி எம்.எல்.ஏ.வான சவாண், தன் ராஜினாமா கடிதத்தை பேரவைத் தலைவர் திலிப் வால்ஸ் பாட்டிலிடம் ஒப்படைத்தார். விலாஸ்ராவ் தேஷ்முக்கிற்குப் பிறகு மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வராக 2008-ம் ஆண்டு பதவியேற்ற அசோக் சவான் ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் குற்றச்சாட்டால் 2010-ம் ஆண்டு தன் பதவியிலிருந்து விலகினார்.
இவரது தலைமையில் 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 17 இடங்களையும், சட்டமன்றத் தேர்தலில் 82 இடங்களையும் காங்கிரஸ் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.