இந்தியா

திலீப் பாண்டே மீது போலீஸ் வேனை ஏற்ற முயன்ற விவகாரம்: ராஜ்நாத் சிங்கிடம் ஆம் ஆத்மி நிர்வாகிகள் புகார்

பிடிஐ

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த திலீப் பாண்டே மீது போலீஸ் வேனை ஏற்றி கொல்ல முயன்றது தொடர்பாக, அக்கட்சியின் மூத்த தலைவர்களான குமார் விஸ்வாஸ் சஞ்சய் சிங், அஷுடோஷ், துர்கேஷ் பதக் மற்றும் திலீப் பாண்டே உள்ளிட்டோர் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேற்று சந்தித்து புகார் செய்தனர்.

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் குமார் விஸ்வாஸ் கூறியதாவது:

எங்கள் கட்சியின் டெல்லி ஒருங்கிணைப்பாளர் திலீப் பாண்டே மீது போலீஸ் வேனை ஏற்றி கொல்ல முயன்றது தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து புகார் செய்தோம். அப்போது இதுதொடர்பான வீடியோ காட்சியையும் அவரிடம் ஒப்படைத்தோம்.

இந்த செய்தியை ஊடகங்கள் மூலம் தெரிந்து கொண்டதாகவும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல் துறை உயர் அதிகாரிகளுடன் பேசுவதாகவும் அவர் உறுதி அளித்தார்.

‘பெடி பச்சாவ் பெடி பதாவ்’, ‘செல்பி வித் டாட்டர்ஸ்’ என பெண் குழந்தைகளின் உரிமையைப் பாதுகாப்பதற்கான பிரச்சாரங்களை மத்திய அரசு செய்து வருகிறது. இந்நிலையில் டெல்லி போலீஸாரின் நடவடிக்கை இதற்கு எதிரானதாக உள்ளது.

டெல்லியின் ஆனந்த் பர்பத் பகுதியில் 19 வயது பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இதுவிஷயத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீஸார் மெத்தனமாக செயல்படுகின்றனர். இதுகுறித்தும் அமைச்சரிடம் புகார் தெரிவித்தோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து திலீப் பாண்டே கூறும்போது, “டெல்லியில் சட்டம் ஒழுங்கு நிலை மிகவும் மோசமாக இருப்பதாக அமைச்சரிடம் எடுத்துக் கூறினோம். இதைக் கேட்டுக்கொண்ட அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்” என்றார்.

போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட கட்சித் தொண்டர்களை விடுவிக்கக் கோரி, திலீப் பாண்டே டெல்லி ராஜீந்தர் நகர் காவல் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு சென்றுள்ளார். அப்போது பின்னாலிருந்து வந்த ஒரு போலீஸ் வேன் தன்னை இடித்து தள்ள முயன்றதாகவும், கட்சித் தொண்டர் ஒருவர் தள்ளி விட்டதால் உயிர் தப்பியதாகவும் பாண்டே குற்றம்சாட்டி இருந்தார்.

SCROLL FOR NEXT