டெல்லியில் கல்வி மற்றும் மருத்துவ வசதிகளை அதிகரிப்பதற்காக தனியார் பெரு நிறுவனங்களிடம் நன்கொடை கேட்க அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக டெல்லியின் முக்கியத் துறை தலைவர்கள் மற்றும் உயரதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில், டெல்லி அரசின் நலம் விரும்பிகள் மற்றும் பெரு நிறுவனங்களிடம் நன்கொடை திரட்டுவது எனவும், இதில் கல்வி மற்றும் மருத்துவ வசதியை பெருக்குவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஓர் இணையதளம் உருவாக்கி அதில் நன்கொடை அளிப்பவர்கள் விவரம் மற்றும் அதை அரசு செலவிடும் முறை உட்பட அனைத்து தகவல்களையும் வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது முதல், பெரு நிறுவனங்களை அர்விந்த் கேஜ்ரிவால் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். ஆனால் ஆட்சிக்கு வந்த பின் நன்கொடை என்ற பெயரில் பெரு நிறுவனங்களின் உதவியை நாடும் நிலை கேஜ்ரிவாலுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து ‘தி இந்து’விடம் ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, “டெல்லி மாநில அரசின் அதிகாரங்கள் தொடர் பாக மத்திய அரசுடன் மோதல் ஏற்பட் டுள்ளதால், முதல்வர் கேட்கும் நிதி முழுவதுமாக கிடைப்பதில்லை. எனவே, மக்களின் நலனுக்காக பெரு நிறுவனங்களிடம் நன்கொடை திரட்ட முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்தனர்.
இந்த முடிவுக்கு டெல்லி அரசின் நிதி நெருக்கடியும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. டெல்லி அரசு கடந்த 2014-15 நிதியாண்டில் ரூ. 19,000 கோடி மதிப்புக் கூடுதல் வரி (வாட்) வசூல் செய்திருந்தது. நடப்பு நிதியாண்டில் (2015-16) இதனை ரூ. 24,000 கோடியாக வசூல் செய்யத் திட்டமிட்டுள்ளது. ஆனால் காலாண்டு முடிந்தும் இதில் இதுவரை வெறும் ரூ.100 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு, டெல்லி வியாபாரிகள் முறையான ரசீது போடாமலேயே வியாபாரம் செய்து வருவது ஒரு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
இதுபோல் பல்வேறு காரணங் களால் அரசுக்கு ஏற்படும் நஷ்டத் தால் டெல்லி அரசின் நிதிநிலையில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை சமாளிக்க பெட்ரோல் மீதான 20 சதவீத வாட் வரியை 25 சதவீதமாகவும் டீசல் மீதான வரியை 12.5 சதவீதத்தில் இருந்து 16.6 சதவீதமாகவும் சமீபத்தில் உயர்த்தி உள்ளது.
நிறுவனங்கள் சட்டம், பிரிவு 135-ன் கீழ் தனியார் பெரு நிறுவனங்கள் சமூக பொறுப்புக்கு என தனியாக நிதி ஒதுக்குகின்றன. இதன் கீழ் நாடு முழுவதும் 16,352 நிறுவனங்கள் ஆண்டுக்கு சுமார் ரூ. 20,000 கோடி செலவிட்டு வருவதாக கணக்கிடப் பட்டுள்ளது. இந்த நன்கொடையை குறிவைத்து கேஜ்ரிவால் அரசு தனது புதிய யோசனையை செயல்படுத்த உள்ளது.
2015-16-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் கேஜ்ரிவால் அரசு, கல்விக்கான ஒதுக்கீட்டை இரு மடங்காக்கியது. அதாவது கல்விக்கு ரூ. 9,386 கோடி ஒதுக்கப்பட்டது. இதனை அடுத்து மருத்துவத்திற்கு ரூ. 4,787 கோடி ஒதுக்கி இருந்தது.