மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவின் கீழ், விவசாய நிலங்களை கையகப்படுத்த காங்கிரஸ் ஒரு போதும் அனுமதிக்காது, என நேற்று ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி திட்டவட்டமாக கூறினார்.
ஆந்திர மாநில பிரிவினைக்கு பின்னர் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி இந்த மாநிலத்தில் தோல்வியடைந்தது. தற்போது ஓராண்டுக்கு பிறகு, ஆந்திராவில் கட்சியை பலப்படுத்தும் நோக்கத்தில், வறட்சி மாவட்டமான அனந்தபூரில் நேற்று கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறும் வகையில் ராகுல் பாதயாத்திரை மேற்கொண்டார்.
நேற்று காலை ஒடல தேவர செருவு பகுதிக்கு சென்று மரக்கன்று நட்டு தனது பாதயாத்திரையை தொடங்கினார். பின்னர் ஒடிசி மண்டலத்தில் ராகுல் காந்தி பொது கூட்டத்தில் பேசியதாவது:
கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட விவசாய குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது ஆந்திராவில் உள்ள பிரச்சினை மட்டும் அல்ல. தேசிய பிரச்சினை யாகும்.
பலத்த எதிர்பார்ப்பை உண்டாக்கி மோடி அரசு ஆட்சியை பிடித்தது. ஆனால் ஆட்சியை பிடித்தவுடன், விவசாய நிலங்களை கையகப்படுத்தி தொழிலதிபர்களுக்கு தாரைவார்க்க முடிவு செய்தது. நிலம் கையகப்படுத்தும் மசோதாவை மத்திய அரசு தவறாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
விவசாயிகளின் அனுமதியில் லாமல் அவர்களின் நிலங்களை கையகப்படுத்த கூடாது, கைய கப்படுத்தப்பட்ட நிலத்தை தொழிற் சாலைக்கு பயன்படுத்த வில்லையெனில், 5 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த நிலத்தை உரிய விவசாயிக்கே திருப்பி அளிக்க வேண்டும் என்பவையே காங்கிரஸ் வகுத்த சட்டமாகும். ஆனால் இவற்றைக் கடைப்பிடிக்க மத்திய அரசு மறுக்கிறது.
நிலம் கையகப்படுத்தும் மசோதா குறித்து காங்கிரஸ் போராட்டம் செய்வதால்தான் மோடி பின்வாங்குகிறார். மத்திய அரசுக்கு யாரும் பயப்படும் நிலை இங்கில்லை.
ஏழைகள், விவசாயிகள், நெசவாளர்களுக்கு மோடி அரசு மீது நம்பிக்கை இல்லை.இந்த அரசால் தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து கவலை கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
மாநில பிரிவினை சட்டத்தின் படி, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிட வேண்டும். மேலும், போலாவரம் அணைகட்டும் திட்டத்தை விரைவுபடுத்தி முடிக்க வேண்டும். ஆனால் தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜ அரசு சிறப்பு அந்தஸ்து வழங்க முன் வரவில்லை. போலாவரம் அணை கட்டும் திட்டமும் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. ஆனால் இதனை தெலுங்கு தேசமும், ஒய்எஸ்ஆர் கட்சியும் ஏன் எதிர்க்கவில்லை? ஆந்திர மாநிலத்தின் எதிர்காலத்தை இந்த இரு கட்சிகளும் மோடியின் காலடியில் அடகு வைத்து விட்டன.
இந்த விஷயங்களுக்காகப் போராட யார் அழைத்தாலும் இங்கு வந்து போராட தயாராக இருக்கி றேன். மாநில பிரிவினை சட்டத்தை முழுமையாக அமல்படுத்தினாலே ஆந்திர மாநிலம் நாட்டின் முதல் மாநிலமாக வளர்ச்சி பெறும்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.