சத்தீஸ்கரில் மது போதையில் இருந்த ஆரம்ப பள்ளி ஆசிரியர், மாணவர்களிடம் 'மது அருந்துங்கள்' என்று பாடம் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சத்தீஸ்கர் மாநிலம் கொரீய என்ற மாவட்டத்த்தின் முர்மா பகுதியில் உன்னயன் அரசு ஆரம்பப் பள்ளி இயங்குகிறது. இங்கு ஆசிரியராக பணியாற்றி வந்த ஆசிரியர், கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிக்கு மது அருந்தி போதையில் வந்து உள்ளார்.
அத்துடன் நிலைத் தடுமாறி, மாணவர்களுக்கு பாடம் நடத்துகையில் கரும்பலக்கையில் 'டாறு பியோ' (daaru piyo) என எழுதியுள்ளார். (அதன் அர்த்தம் 'மது அருந்து' என்பதுதான்).
கரும்பலகையில் எழுதிய அந்தப் பாடத்தை போதையில் இருந்த ஆசிரியர், பச்சிளம் மாணவர்களை உரக்க வாசிக்கவும் செய்துள்ளார். இதனைக் கண்ட உள்ளூர் செய்தியாளர், ஆசிரியர் போதையில் பாடம் நடத்தியதை வீடியோ எடுத்து செய்தியாக்கினார். அந்த வீடியோ வைரலாக பரவிய நிலையில், இந்த விவகாரம் மாவட்ட கல்வித்துறையை எட்டியது.
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதையில் பள்ளிக்கு வந்து நிலைதவறி தவறான பாடத்தை எடுத்ததாக ஆசிரியரும் தனது தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கோரியுள்ளார். மேலும் இதே போல பல முறை அவர் போதையில் வந்து மாணவர்களுக்கு பாடம் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரமும் வைரலாக இணையத்தில் சுற்றிவரும் வீடியோவும் காண்போரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.