மக்களவையில் நேற்று பல்வேறு கேள்விகள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர்கள் அளித்த பதில்களின் தொகுப்பு
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா:
நாட்டில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைகளில் 567 மருத்துவர் பணியிடங்களும், 382 மருத்துவ நிபுணர் பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன. இம்மருத்துவ மனைகளில் மொத்தம் 1908 மருத்துவர்கள் பணியிடங்கள் உள்ளன. ஆனால் 1,341 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். இஎஸ்ஐ மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள் தனியாக வெளியே மருத்துவமனை நடத்த அனுமதிக் கப்படுவதில்லை. இதனால் பல மருத்து வர்களும், நிபுணர்களுக்கும் இப்பணிக்கு விண்ணப்பிப்பது இல்லை. நாட்டில் ஓட்டுமொத்தமாகவே மருத்துவர்கள் குறைவாக உள்ளனர். அது இந்த பிரச்சினைக்கு காரணம் என்றார்.
உருக்கு மற்றும் சுரங்கத் துறை இணையமைச்சர் விஷ்ணு தியோ சாய்:
ஜப்பான் மற்றும் தென்கொரியாவுக்கு உருக்கு ஏற்றுமதியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி ரூ.5 ஆயிரத்து 989 கோடியாக உருக்கு ஏற்றுமதி மதிப்பு அதிகரிக்கும். இதற்காக ஜப்பான் மற்றும் தென்கொரியாவுடன் நீண்டகால ஏற்றுமதிக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பும் அதிகரிக்கும்.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா:
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் அதன் அலுவலகங்களில் கடந்த நிதியாண்டில் சிறுபான்மை இனத்தை சேர்ந்த 9,303 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுத் துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த 5,572 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ராணுவத்தில் சிறுபான்மையினர் 2,303 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கலாச்சாரத் துறை இணையமைச்சர் மகேஷ் சர்மா:
ஹைதராபாத் அருங்காட்சி யகத்தில் உள்ள எகிப்து மம்மி முறையாக பாதுகாக்கப்படாததால் கெட்டுப்போய் விட்டதாக வெளியான தகவல் தவறானது. அதனை சரியான குளிர்நிலையில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அதனைப் புகைப்படம் எடுப்பதால் பிளாஷ் மூலம் வெப்பம் அதிகரிக்கும் என்பதால், புகைப்படம் எடுக்கவும் அனுமதிக்கப்படவில்லை. அதனை முறையாக பராமரிப்பதற்கு தேவையான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.