இந்தியா

மத்திய அரசின் திட்டங்கள் 30 ஆக குறைகிறது: நிதி ஆயோக் கூட்டத்தில் கருத்தொற்றுமை

பிடிஐ

மத்திய அரசின் ஆதரவில் அமல்படுத்தப்படும் திட்டங்கள் 72-ல் இருந்து 30 ஆக குறைகிறது. நிதிஆயோக் கூட்டத்தில் முதல்வர்களின் துணைக் குழு நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான கருத்தொற்றுமை ஏற்பட்டது.

இந்த குழுவானது ‘பிளெக்சி பண்ட்’ என்ற தொகுப்புக்காக பங்களிப்பதை தற்போதைய 10 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்த்தவும் பரிந்துரைத்துள்ளது.

இது பற்றி குழுவின் அமைப்பாளரான மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் ஆதரவிலான திட்டங்களை குறைப்பதற்கும் இரு வகையான திட்டங்களை மேற்கொள்ளவும் விரிவான கருத்தொற்றுமை ஏற்பட்டது. நிதி ஆயோக் உறுப்பினர்களின் சம்மதம் பெற்று ஜூலை 5-ம்தேதி பரிந்துரைகள் இறுதி செய்யப்படும்.

அதன் பிறகு பிரதமர் நரேந்திர மோடிக்கு இறுதி அறிக்கை அனுப்பப்படும். மேலும் சில ஆலோசனைகளும் வந்துள்ளன. நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி தலைமையில் நிதிஆயோக் அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு விரிவாக ஆலோசனை நடத்தி ஜூலை 5-ம் தேதிக்குள் இறுதி வரைவு அறிக்கையை தயாரிக்கும். இந்த வரைவு அறிக்கைக்கு அனைத்து முதல்வர்களின் ஒப்புதல் பெற்று இறுதிப் பரிந்துரை பிரதமரிடம் வழங்கப்படும்.

இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

நிதி ஆயோக் துணைக் குழுவானது ஒரு மாத இடைவெளியில் நான்கு முறை கூடியுள்ளது. கடந்த கூட்டம் போபாலில் மே 28-ம் தேதி நடந்தது. முந்தைய ஆலோசனை கூட்டங்களின் அடிப்படையில் வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு கருத்து கேட்பதற்காக உறுப்பினர்களின் பார்வைக்கு நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி சிந்துஸ்ரீ குல்லர் தலைமையிலான குழு தயாரித்தது.

மத்திய அரசின் ஆதரவிலான திட்டங்களை இரு பிரிவாக வகைப்படுத்த இந்த வரைவு அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

இதில் முதலாவதாக இடம்பெறுவது முக்கிய திட்டம் ஆகும். இதில் நாடாளுமன்றத்தின் துணையுடன் நடத்தப்படும் தேசிய ஊரகவேலைவாய்ப்புத்திட்டம், தூய்மை இந்தியா திட்டம், மதிய உணவு திட்டம் உள்ளிட்ட தேசிய மேம்பாட்டுத்திட்டங்கள் அடங்கும். இறுதிப்பட்டியல் பின்னர் முடிவு செய்யப்படும். இரண்டாவது தொகுப்பில் வருவது விருப்பத்தின் அடிப்படையிலானது. இவை சமூக பாதுகாப்பு திட்டங்களாகும்.

திட்டங்களை இரண்டாகப் பிரிப்பதன் மூலம் மத்திய அரசு ஆதரவிலான திட்டங்கள் 30 ஆக குறையும். மத்திய அரசின் பங்கு 50 சதவீதத்துக்கு குறையாது என்று வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று நடந்த நிதி ஆயோக் துணைக் குழு கூட்டத்தில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், கேரளா, உத்தரப்பிரதேசம், நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT