இந்தியா

ராஜ்நாத் உடன் கேஜ்ரிவால் சந்திப்பு: மோதல் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி

பிடிஐ

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தார். ஒரு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின்போது துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் இருந்தார்.

டெல்லி மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் குறிப்பாக உள்துறைக்கும் இடையே அண்மைகாலமாக கருத்து மோதல்கள் நிலவி வந்தன. அதேபோல் டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்குக்கும் மாநில அரசுக்கும் இடையே பரஸ்பரம் இணக்கம் இல்லாமல் இருந்தது. அதிகாரிகள் நியமனம், மாறுதல் போன்ற விவகாரங்களில் இருதரப்புக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை முதல்வர் கேஜ்ரிவால் இன்று (திங்கள்கிழமை) சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, ஆளுநருடனான கசப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும், இவ்விவகாரத்தில் உள்துறை அமைச்சர் தலையிட்டு சுமுக சூழலை ஏற்படுத்த வேண்டும் என கேஜ்ரிவால் கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது.

இந்த சந்திப்பு குறித்து உள்துறை வட்டாரம் கூறும்போது, "கேஜ்ரிவால் கோரிக்கைகளை பொறுமையாக கேட்டுக் கொண்ட ராஜ்நாத் சிங் டெல்லி மாநில அரசுக்கு மத்தியில் இருந்து முழு ஆதரவு கிடைக்கும் எனக் கூறினார். மேலும், டெல்லி முதல்வர் மத்திய அரசுடனான மோதல் போக்கினை கைவிட வேண்டும். உள்துறை அமைச்சக முடிவுகள் அனைத்தும் தேசிய யூனியன் பிரதேச சட்டத்தின்படியே எடுக்கப்படுகின்றன என எடுத்துரைத்தார்" எனத் தெரிவித்துள்ளது.

ஆம் ஆத்மி அரசுக்கும், டெல்லி துணை நிலை ஆளுநருக்கும் இடையே உயர் அதிகாரி நியமன விவகாரத்தில் கருத்து மோதல் ஏற்பட்ட பிறகு கேஜ்ரிவால் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்திப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT