பிரபல வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான ராமசந்திர குஹாவுக்கு ஜப்பானின் பெருமதிப்பிற்குரிய புகோகா விருது வழங்கப்பட உள்ளது.
ஆசியக் கண்டத்தில் கல்வி, கலை மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு கல்விப் பிரிவில் குஹாவுக்கு விருது வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து விருது அமைப்பு கூறும்போது, "இந்தியாவின் தலைசிறந்த வரலாற்றாசிரியர் களில் ஒருவரான ராமசந்திர குஹா, சுற்றுச்சூழல் வரலாறு குறித்து பொதுமக்கள் பார்வையில் இருந்து புதிய பாதையை வகுத்துள்ளார். பல்வேறு மொழிகள், இனங்கள், மதங்கள் மற்றும் சாதிகள் நிறைந்த இந்திய நாட்டின் சிக்கல் மிகுந்த வரலாற்றை இவரின் படைப்புகள் ஆழமாக விவரிக்கின்றன" என்று குறிப்பிட்டுள்ளது.
செப்டம்பர் 17ம் தேதி ஜப்பானில் புகோகா சர்வதேச மாநாட்டு மையத்தில் இந்த விருது வழங்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து 19ம் தேதி ‘காந்தி, இந்தியா மற்றும் உலகம்' என்ற தலைப்பில் குஹா உரையாற்றவுள்ளார்.
இந்த விருதை ஏற்கெனவே இந்தியர்கள் ரோமிலா தாப்பர், ஆஷிஷ் நந்தி ஆகியோர் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.