விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுபவர்கள் இனி மருத்துவமனை மற்றும் காவல் துறை அதிகாரிகளின் தொந்தரவு குறித்து அச்சமடையத் தேவையில்லை. மேலும் விபத்தால் பாதிக் கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் மருத்துவர் கள் இனி கடமை செய்யத் தவறி யவர்களாக கருதப்படுவார்கள்.
இது தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இந்த வழிகாட்டு விதிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 5 லட்சம் சாலை விபத்துகள் ஏற்பட்டு, 1.5 லட்சம் பேர் பலியாகி வரும் நிலையில், இந்த சுற்றறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
“விபத்துக்குப் பின் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்படும்போது, அதற்கு உதவியவர்கள் மட்டுமல்ல, விபத்தை நேரில் பார்த்தவ ராக இருந்தாலும் (சாட்சி), அவர் கள் உடனே அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். மேலும் நிவாரணமோ அல்லது பரிசோ வழங்கி அதிகாரிகளால் இவர்கள் கௌரவிக்கப்பட வேண்டும். இதனால் விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மற்றவர்களும் முன்வருவார்கள்” என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்த சுற்றறிக்கையில், “விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்தாலோ அல்லது போதிய அக்கறை செலுத்தாவிட்டாலோ, அவர்கள் கடமை செய்யத் தவறியவர்களாக கருதப்பட்டு ஒழுங்கு நட வடிக்கைக்கு ஆளாக நேரிடும்.
விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுபவர்கள் வழக்கில் உதவ வேண்டியது கட்டாயம் இல்லை. விபத்து குறித்து தொலைபேசியில் தகவல் அளிப்பவர்கள் தங்கள் பெயர் மற்றும் பிற விவரங்களை தருவதும் அவசியமில்லை. இந்த விவரங்களை தருமாறு கட்டாயப்படுத்தினால், தொடர்புடைய அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை அல்லது துறைரீதி யான நடவடிக்கை எடுக்கப்படும்.
சாட்சியம் அளிக்க தாமாக முன்வருவோரை, வழக்கு விசாரணையின்போது ஒருமுறை மட்டுமே விசாரிக்க வேண்டும்” என்றும் கூறப்பட்டுள்ளது.
“விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுபவர்களை பாதுகாப்பது தொடர்பாக உச்ச நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவின் கீழ் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய சட்டம் இயற்றப்படும் வரை இந்த வழிகாட்டு விதிகள் அமலில் இருக்கும்” என்றும் சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.