சச்சின் டெண்டுல்கருக்கு அளிக்கப்பட்ட நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னாவை திரும்பப் பெற வேண்டும் என்ற மனுவை மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
போபாலில் வசிக்கும் வி.கே.நஸ்வா என்பவர் இது தொடர்பாக தனது மனுவில், பாரத ரத்னா என்ற நாட்டின் உயரிய விருதின் மூலம் பெற்ற புகழை சச்சின் தனது விளம்பர வருவாயைப் பெருக்கிக் கொள்ள பயன்படுத்துகிறார், இதனால் சச்சின் டெண்டுல்கருக்கு அளிக்கப்பட்ட பாரத ரத்னா விருதை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், மற்றும் கேகே.திரிவேதி ஆகியோர் அடங்கிய குழு, பாரத ரத்னா விருது பெற்றவர்கள் செய்யக்கூடியவை அல்லது செய்யக் கூடாதவை என்பது பற்றி உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் ஏதும் இருக்கிறதா என்று உதவி சொலிசிட்டர் ஜெனரலுக்கு உத்தரவிட்டு, ஒரு வாரத்தில் பதிலளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
சச்சின் டெண்டுல்கர் பாரத ரத்னா கொடுத்த புகழை தனது விளம்பர வருவாயைப் பெருக்க பயன்படுத்தி வருகிறார் என்றும், இது நாட்டின் உயரிய விருதுக்கு இழைக்கப்படும் மரியாதைக் குறைவான செயல் என்று கூறியதோடு, சச்சின் டெண்டுல்கர் எனவே தார்மீக அடிப்படையில் பாரத ரத்னாவை திருப்பி அளிக்க வேண்டும் அவ்வாறு அவர் செய்யவில்லையெனில் மத்திய அரசு அவரிடமிருந்து பாரத ரத்னா விருதைத் திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் 12 பிராண்டுகளுக்கும் மேல் விளம்பரதாரராக இருந்து வருகிறார். அவைவா லைஃப் இன்ஸூரன்ஸ், பூஸ்ட், எம்.ஆர்.எஃப்., லுமினஸ் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனமான அமித் எண்டர்பிரைசஸ் உள்ளிட்டவைக்க்கு சச்சின் விளம்பரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.