கர்நாடக ஊராட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற 102 வயதான கவுதமம்மா, அமைச்சர் ஹெச்.எஸ்.மகாதேவா முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார். கவுதமம்மா ஹனூர் ஊராட்சித் தலைவர் பதவியை பெறும் நோக்கத்திலே காங்கிரஸில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகத்தில் நடந்து முடிந்த ஊராட்சித் தேர்தலில் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள தொட்டாலத் தூர் என்ற கிராமத்தில் 102 வயதான கவுதமம்மா சுயேச்சையாக போட்டி யிட்டு வெற்றிப்பெற்றார். இதன் மூலம் நாட்டிலே அதிக வயதான பெண் கிராம ஊராட்சி உறுப்பினர் என்ற பெருமையைப் பெற்றார்.
கவுதமம்மாவை தங்களது கட்சியில் இணைத்துக்கொள்ள காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் விரும்பின. இதையடுத்து அந்த கட்சிகளின் சாம்ராஜ்நகர் மாவட்ட தலைவர்கள் கவுதமம்மாவிடம் கடந்த மூன்று தினங்களாக பேச்சு வார்த்தை நடத்தினர். இந்நிலையில் சாம்ராஜ்நகர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஹெச்.எஸ்.மகாதேவா கடந்த ஞாயிற்றுக்கிழமை கவுதமம்மாவை சந்தித்து பேசினார்.
இதனைத் தொடர்ந்து சாம்ராஜ் நகர் அருகேயுள்ள மாதேஸ்வரன் மலைக்கு சென்ற கவுதமம்மா, அமைச்சர் மகாதேவா முன்னிலை யில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதர வாளர்களுடன் காங்கிரஸில் இணைந்தனர்.
கவுதமம்மா காங்கிரஸில் இணைந்தது தொடர்பாக விசாரித்த போது, “தற்போது ஆளும் கட்சி யாக இருக்கும் காங்கிரஸில் இணைந்தால், தொட்டாலத்தூர் கிராமத்துக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தருவதாக அமைச்சர் மகாதேவா உறுதி அளித்தார். கிராம மக்களுடன் கலந்து ஆலோசித்துவிட்டு கவுதமம்மா காங்கிரஸில் இணைய முடிவெடுத்தார். தற்போது காங்கிர ஸில் இணைந்துள்ள கவுதமம்மா வுக்கு ஹனூர் ஊராட்சித் தலைவர் பதவியை தர காங்கிரஸ் மேலிடம் ஒப்புதல் அளித்துள்ளது''என்றனர்.
தொட்டாலத்தூரில் வசித்து வரும் கவுதமம்மா தனது 49-வது வயதில் கணவர் அவல்நாயக்கை பறிகொடுத்தார். அதன் பிறகு தனது 6 மகள்கள், ஒரு மகனை தனியாகப் போராடி வளர்த்தார். இவருக்கு தற்போது 66 பேரக்குழந்தைகள் இருக்கிறார்கள். இவரது மகள்கள் 6 பேரும் பேரக்குழந்தைகள் எடுத்துவிட்டனர். மகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காலமானார்.
102 வயதானாலும் கொஞ்சமும் தளராத கவுதமம்மா, இன்னும் தனியாகவே வசிக்கிறார். உணவு சமைப்பது, தண்ணீர் சுமப்பது, துணி துவைப்பது, கடைக்கு செல்வது, ஆடு மேய்ப்பது உட்பட தனது பணிகளை தானே செய்துகொள்கிறார்.
இதுமட்டுமில்லாமல் அந்த கிராமத்தில் உள்ள வயதானவர் களுக்கு மாதந்தோறும் வரும் அரசு பணத்தை முறையாக வாங்கி தருவது, ரேஷன் கடையில் அரிசி வாங்கித் தருவது, ஊராட்சி அலுவலகத்தில் படிவத்தை நிரப்பி கொடுப்பது உள்ளிட்ட உதவிகளையும் செய்து வருகிறார்.