இந்தியா

குஜராத், ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களிலும் மேகி-க்கு தடை

பிடிஐ

டெல்லி, உத்தராகண்ட் மாநிலங்கள் நெஸ்லேயின் சர்ச்சைக்குரிய மேகி விற்பனையை தடை செய்ததை தொடர்ந்து குஜராத், ஜம்மு-காஷ்மீர் மாநில அரசுகளும் தடை விதித்துள்ளன.

உணவுப்பாதுகாப்புச் சோதனையில் மேகி-யில் அளவுக்கதிமாக ரசாயனங்கள் கலந்திருப்பதன் காரணமாக குஜராத், காஷ்மீர் மாநில அரசுகள் ஒரு மாதத்துக்கு மேகி விற்பனையைத் தடை செய்தது.

மேலும், அனைத்து மேகி பாக்கெட்டுகளையும் சந்தையிலிருந்து திரும்பப் பெறுமாறு குஜராத் அரசு உத்தரவிட்டுள்ளது.

பரிசோதனையில் 4 பிபிஎம் காரீயம் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் மோனோசோடியம் குளூட்டமேட் என்ற உப்பின் அளவும் அதிகமாக இருந்தது தெரியவந்ததால் குஜராத் அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுதவிர சன்பீஸ்ட், எஸ்.கே.ஃபுட்ஸ் ஆகிய நிறுவனங்களின் ‘இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்’ ஆகியவையும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு எஸ்.கே.ஃபுட்ஸ் நூடுல்ஸுக்கு ஒரு மாதம் தடை விதித்துள்ளது.

குஜராத் சுகாதார அமைச்சர் நிதின் படேல் கூறும் போது, “எந்த ஒரு உணவுப்பொருளிலும் அனுமதிக்கப்படாத மோனோசோடியம் குளூட்டமைட் அனைத்து சாம்பிள்களிலும் இருந்தது. இதனால் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு ஒருமாதம் தடை விதிக்கப்படுகிறது. மேலும் அனைத்து மேகியையும் சந்தையிலிருந்து திரும்பப் பெற உத்தரவிடுகிறோம்” என்றார்.

முன்னதாக மத்திய அமைச்சர் பஸ்வான் கூறும்போது, "தவறான வழிகாட்டுதலுடனான விளம்பரங்கள் மற்றும் இ-ஷாப்பிங் விஷயங்களில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் கடுமையான பிரிவுகளை ஏற்படுத்தவிருக்கிறோம்” என்று எச்சரித்துள்ளார்.

நேற்று தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பாணையத்திடம் மத்திய அரசு புகார் அளித்துள்ளது. மத்திய அரசு முதல் முறையாக நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் இந்தப் பிரிவை பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT