இந்தியா

அமர்நாத் யாத்திரைக்கு தடை இல்லை: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்

பிடிஐ

அமர்நாத் யாத்திரை செல்வதற்கு இந்தத் தேதியில்தான் செல்ல வேண்டும் என்று எந்த அறிவியல் தகவலும் இல்லை. அதனால், ஆண்டு முழுக்க எப்போது வேண்டுமானாலும் யாத்திரை செல்லலாம். ஆனால் பிரிவினைவாதிகள் இந்தப் பிரச்சினையை அரசியலாக்கி வருகிறார்கள் என்று மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுவதாகக் கூறி, அமர்நாத் யாத்திரைக்கு அனுமதிக்கப்பட்ட இரண்டு மாத கால அளவை ஒரு மாதமாகக் குறைக்க வேண்டும் என்று காஷ்மீரில் செயல்பட்டு வரும் ஹுரியத் மாநாட்டுக் கட்சியின் தலைவர் சையது அலி ஷா கிலானி உட்பட பல பிரிவினைவாதிகள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக நேற்று காஷ்மீரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் அலுவலகத்துக்கான மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது:

சுற்றுச்சூழலை நாம் பாதுகாப்பாக வைத்திருக்கும் பட்சத்தில், ஆண்டு முழுக்க அமர்நாத் யாத்திரையை மேற்கொள்ளலாம். இந்த தேதியில் இருந்து இந்த தேதி வரைக்கும்தான் யாத்திரை செல்ல வேண்டும் என்று எந்த அறிவியல் தகவலும் இல்லை.

தகுந்த தருணம் வாய்க்கிற போதுதான் யாத்திரை செல்வதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த யாத்திரை தேதிகள் எல்லாம் அமர்நாத் யாத்திரை வாரியத்தால் முடிவு செய்யப்படுகின்றன. அதில் அரசு எந்தத் தலையீடும் செய்வதில்லை.

இந்தப் பருவம் யாத்திரை செல்வதற்கு மிக உகந்த பருவமாக இருக்கிறது. ஆனால் இந்தப் பருவத்தில் யாத்திரை மேற்கொள்ளக் கூடாது என்று அறிவியல்ரீதியாக எந்த அறிவிப்பும் இல்லை. எனவே, அமர்நாத் யாத்திரைக்கு தடை விதிக்க முடியாது.

சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து எழுப்பப்படும் குரல்கள் நியாயமானவைதான். ஆனால் பிரிவினைவாதிகள் இதனை அரசியலாக்குகின்றனர்.

வானிலை இடர்பாடுகளைத் தவிர, யாத்திரை மேற்கொள்வதற்கு வேறு எந்தப் பிரச்சினையும் வந்துவிடப் போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்

SCROLL FOR NEXT