இந்தியா

சூரிய வணக்கத்தை எதிர்ப்போர் கடலில் குதிப்பீர்: பாஜக எம்.பி.

முகமது அலி

சூரிய வணக்கத்தை எதிர்ப்பவர்கள் கடலில் மூழ்கிவிடலாம் என்று தாம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதாக சர்ச்சைக் கருத்துகளுக்கு பெயர்பெற்ற பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோரக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. யோகி அதித்யாநாத் கூறும்போது, "சூரியனிடமிருந்தே வாழ்க்கைக்கான ஆற்றல் நமக்கு கிடைக்கிறது. யோகாவை தவிர்க்க நினைப்பவர்கள் இந்தியாவிலிருந்தே வெளியேரலாம்.

சூரியனை மதவாதத்தோடு பார்ப்பவர்கள் தயவுகூர்ந்து சென்று கடலில் மூழ்கிவிடலாம் அல்லது இருட்டறைக்குள்ளே வாழலாம்.

எந்தச் சமூகத்தினர் என்று பார்த்து சூரிய ஒளி வீசுவதில்லை. அதன் ஆற்றலுக்கு சாதி, மத பேதம் கிடையாது.

இது புரியாமல் இதனை இவர்கள் மதவாதத்தோடு ஒப்பிடுவது அவர்களது பின்தங்கிய மனநிலையை மட்டுமே காட்டுகிறது" என்றார். வாரணாசியில் நடந்த நிகழ்ச்சியில் இவ்வாறு அவர் கூறினார்.

வரும் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. ஐ.நா. அறிவித்துள்ள யோகா தினத்தை முன்னிட்டு சர்வதேச அளவிலான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நியூயார்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தில் நடக்க இருக்கும் இந்த விழாவை இந்தியா முன்னெடுக்க உள்ளது.

இந்த விழாவுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையேற்கிறார். ஆனால் இந்தியாவில் இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. யோகா தினத்தை முன்னிட்டு சூரிய நமஸ்காரத்தை செய்யக் கூறி வலியுறுத்தக் கூடாது. அதிலும் அரசுப் பள்ளி மாணவர்களிடம் இதனை திணிக்கக் கூடாது என்று முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT