மணிப்பூர் மாநிலம், சாந்தல் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நேற்று நடத்திய திடீர் தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மியான்மர் நாட்டை ஒட்டியுள்ள வடகிழக்கு மாநிலம் மணிப்பூர். இங்கு சாந்தல் மாவட்டத்தில் டோக்ரா ராணுவ படைப் பிரிவைச் சேர்ந்த 6-வது குழுவினர் நேற்று காலை வழக்கம்போல் வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்கள் சென்ற தெங்க் நவ்பால்-நியூ சம்தால் பாதையில் திடீரென சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. அதைத் தொடர்ந்து அங்கு மறைந்திருந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள், ராணுவ வீரர்களை நோக்கி தானியங்கி துப்பாக்கிகளால் சரமாரி யாக சுட்டனர். ராணுவ வாகனங்கள் மீது ராக்கெட்டுகள் மூலமாக எறிகுண்டுகளை வீசினர்.
இந்த திடீர் தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 16 பேர் படுகாயம் அடைந்தனர். அடுத்த சில நிமிடங்களில் சுதாரித்துக் கொண்ட ராணுவ வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர். இதில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பவ பகுதிக்கு உடனடியாக கூடுதல் ராணுவ படைகள் அனுப்பப்பட்டன.
ராணுவ வீரர்களின் தாக்கு தலை சமாளிக்க முடியாமல் தீவிரவாதிகள் வனப்பகுதிக்குள் தப்பியோடி விட்டனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத் தப்பட்டுள்ளது.பலத்த காயம் அடைந்த ராணுவ வீரர்கள் ஹெலி காப்டர்கள் மூலமாக திமாப்பூர், குவாஹாட்டி, ஜோர்ஹட் நகரங் களில் உள்ள ராணுவ மருத்துவ மனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
உல்பா பொறுப்பேற்பு
இந்தத் தாக்குதலுக்கு உல்பா தீவிரவாதிகளும் தேசியவாத நாகாலாந்து சோஷலிஸ்ட் கவுன்சில் (கே) என்ற தீவிரவாத அமைப்பும் கூட்டாகப் பொறுப்பேற்றுள்ளன. இவ்விரு அமைப்புகளும் தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தி நீண்ட காலமாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
பிரதமர் மோடி கண்டனம்
ராணுவ வீரர்கள் மீதான தாக்கு தலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, இது காட்டுமிராண்டித்தனமான, கோழைத்தனமான தாக்குதல், நாட்டுக்காக வீரமரணம் அடைந்த அனைத்து வீரர்களுக்கும் தலைவணங்கி மரியாதை செலுத்து கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறும்போது, மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட ராணுவ வீரர்கள் உயிரை பணயம் வைத்து பணி யாற்றி வருகின்றனர். அவர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிர வாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித் துள்ளார்.
இதனிடையே மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாது காப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ராணுவ தலைமைத் தளபதி தல்பீர் சிங் ஆகியோர் டெல்லியில் நேற்று அவசர ஆலோசனை நடத்தினர்.
தொடர் தாக்குதல்கள்
வடகிழக்கு மாநிலங்களில் பெரும்பாலான பகுதிகளில் ஆயுதப் படை சட்டம் அமலில் உள்ளது. அந்தப் பிராந்தியத்தில் கடந்த ஓராண்டில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களில் சுமார் 450 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு ஆயுதப் படை சட்டம் தொடர்ந்து அமலில் இருக்க வேண்டும் என்று ராணுவ தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
அண்மையில் திரிபுரா மாநிலத்தில் ஆயுதப் படை சட்டம் வாபஸ் பெறப்பட்டது. மணிப்பூர் தாக்குதலைத் தொடர்ந்து அங்கு மீண்டும் சட்டத்தை அமலுக்கு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.