இந்தியா

வளர்ச்சியின் பலன்களை பழங்குடியினருக்கு தரவில்லை: சத்தீஸ்கர், மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பிடிஐ

“மத்தியிலும், சத்தீஸ்கரிலும் ஆளும் பாஜக அரசுகள், 2 -3 தொழிலதிபர்களின் நலனை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றன. வளர்ச்சியின் பலனை பழங்குடியின மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை” என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் ராகுல் தனது 2 நாள் பயணத்தை கொர்பா மாவட்டம், குத்முரா என்ற கிராமத்தில் நேற்று தொடங்கினார். இங்கு காட்டு யானைகள் அட்டகாசத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்பகுதியில் நிலக்கரி சுரங்கப் பணியால் பாதிக்கப்படும் மக்களையும் சந்தித்தார். அப்போது பழங்குடியின மக்களின் வன உரிமைகளை வலியுறுத்தி ராகுல் பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சிக் கொள்கையால் பழங்குடியினருக்கு எவ்வித பலனும் இல்லை. நிலக்கரி சுரங்கத்துக்காக இங்கு நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதனால் பாதிக்கப்படும் மக்களை மறுகுடியமர்வு செய்வது, அவர்களுக்கு உரிய நிவாரணம் அளிப்பது ஆகியவற்றில் பாஜக அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும். விவசாயிகளின் நலன்களுக்காக போராடுவதைப் போல் பழங்குடியினருக்காகவும் நான் போராடுவேன். பழங்குடியினர் பிரச்சினைகளுக்கு தேசிய ஊடகங்கள் முக்கியத்துவம் அளிப்பதில்லை.

வளர்ச்சி பற்றி மோடி தொடர்ந்து பேசி வருகிறார். வளர்ச்சி அவசியம் தான். ஆனால் இதில் பழங்குடியினருக்கான பங்கு என்ன? வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். 2 -3 தொழிலதிபர்களின் வளர்ச்சியை மட்டுமே கொண்டதாக இருக்கக் கூடாது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் லாபத்தை மட்டுமே கருதி தொழிற்சாலைகள் அமைக்கக் கூடாது. இதனால் பழங்குடியின குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும்.

மத்தியிலும் சத்தீஸ்கரிலும் ஆளும் பாஜக அரசுகள் 2 - 3 தொழிலதிபர்களின் நலனை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றன.

நிலம் கையகப்படுத்துவதற்கு முன் விவசாயிகளின் ஒப்புதல் வேண்டும், சமூகத் தணிக்கை வேண்டும் என்ற இரு பிரிவுகள் மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தில் நீக்கப்பட்டுள்ளன. நிலத்தை 5 ஆண்டுகள் வரை பயன்படுத்தாவிடில் அதை விவசாயிகளிடம் திரும்ப வழங்க வேண்டும் என்ற பிரிவும் நீக்கப்பட்டுள்ளது. ‘வளர்ச்சி அவசியம், இதற்காக யாரையும் எதுவும் கேட்கத் தேவையில்லை’ என்று மோடி சொல்கிறார்.

சுரங்கப் பணிக்காக இப்பகுதியில் நிலம் கையகப்படுத்துவதால் பழங்குடியினர் தங்கள் வாழ்வாதாரமான வனப் பகுதியை இழக்கின்றனர். எனவே வளர்ச்சியில் பழங்குடியினருக்கு உரிய பங்கு அளிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

SCROLL FOR NEXT