டெல்லி நீர் வாரியத் துறை துணைத் தலைவராக உள்ள கபில் மிஸ்ரா (34) புதிய சட்ட அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
போலி கல்விச் சான்றிதழ் புகாரால் கைது செய்யப்பட்டதால் சட்ட அமைச்சர் பதவியிலிருந்து விலகிய ஜிதேந்திர சிங் தோமருக்கு பதிலாக கபில் மிஸ்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கரவால் நகரி தொகுதியில் இருந்து முதல்முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட கபில் மிஸ்ரா கூறும்போது, “முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை நான் சந்தித்துப் பேசினேன். அப் போது என்னை சட்ட அமைச்சராக தேர்ந்தெடுத்திருப்பதாக தெரிவித் தார்” என்றார்.
முன்னதாக, சட்ட அமைச்சர் பதவிக்கு சாந்தினி சவுக் எம்எல்ஏ அல்கா லம்பா, முன்னாள் சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி (மாளவியா நகர்) நஜப்கர் தொகுதி எம்எல்ஏ கைலாஸ் கலோட் ஆகியோரது பெயர்களும் பரிசீலிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றபோது மிஸ்ராவுக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக பரவலாக பேசப்பட்டது. எனினும், அவருக்கு டெல்லி நீர் வாரிய துணைத் தலைவர் பதவி கிடைத்தது.
கேஜ்ரிவாலுக்கு மிக நெருக்க மானவராகக் கருதப்படும் மிஸ்ரா, ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கம் தொடங்கியதிலிருந்தே அவருடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
கட்சி மேலிடத்துக்கு எதிராக யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் ஆகியோர் களம் இறங்கிய போது கேஜ்ரிவாலுக்கு ஆதரவு திரட்டி கையெழுத்து இயக்கம் மேற்கொண்டு கேஜ்ரிவாலுக்கு பக்கபலமாக நிற்கும்படி எம்எல்ஏக்கள் அனைவரையும் ஒன்று திரட்டியவர் மிஸ்ரா என்பது குறிப்பிடத்தக்கது.