இந்தியா

பருவ மழை பொய்த்தால் விவசாயிகளுக்கு டீசல், மின்சாரம், விதைகள் வாங்க மானியம்: மத்திய அரசு அறிவிப்பு

பிடிஐ

‘‘பருவ மழை பொய்த்து பயிர் கள் பாதிக்கப்பட்டால், விவசாயி களுக்கு டீசல், மின்சாரம், விதைகள் வாங்க மானியம் வழங்கும்’’ என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு பருவ மழை தாமதமாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த வாரம் கூறியது. இதனால் மழை இல்லாமல் வறட்சி ஏற்படலாம் என்று விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில், மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் நேற்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், மின்சாரம், நீர் ஆதாரம், கிராமப்புற மேம்பாட்டுத் துறை, உணவு மற்றும் உரத் துறை அமைச்சக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்குப் பின்னர் அமைச் சர் ராதா மோகன் சிங் கூறிய தாவது:

பருவ மழை பொய்த்து பயிர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டால், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் விவசாயிகளுக்கு டீசல், மின்சாரம் மற்றும் விதைகள் வாங்குவதற்கு மத்திய அரசு மானியம் வழங்கும். மழை பொய்த்து வறட்சி போன்ற நிலை ஏற்பட்டால், அதை சமாளிக்க அரசு முழு வீச்சில் தயாராக உள்ளது. பருவ மழை பொய்த்துப் போனால், அதை சமாளித்து மாற்று ஏற்பாடுகள் செய்வதற்கு எல்லா துறைகளிலும் பொறுப்பு அதிகாரி ஒருவரை நியமிக்க உத்தரவிட்டுள்ளோம்.

இவ்வாறு அமைச்சர் ராதா மோகன் கூறினார்.

ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.10 மானியம் வழங்கப்படலாம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், விதைகள் வாங்க விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படும் என்று தெரிகிறது. மேலும், விவசாயிகளின் வருவாயைப் பாதுகாக்க, புதிய பயிர்கள் காப்பீடு திட்டம் இந்த ஆண்டு கொண்டு வரப்பட உள்ளது. சந்தையில் பருப்பு வகைகளின் விலைகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வெளிநாடுகளில் இருந்து அவற்றை இறக்குமதி செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

SCROLL FOR NEXT