இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 1324 புதிய கட்சிகள் உதயமாகியுள்ளன.
1952-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது 53 கட்சிகள் மட்டுமே போட்டியிட்டன. இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து கொண்டே வந்தது. 2009 மக்களவைத் தேர்தலின்போது கட்சிகளின் எண்ணிக்கை 363 ஆக இருந்தது. அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கட்சிகளின் மொத்த எண்ணிக்கை 1687 ஆக உயர்ந்துள்ளதாக தேர்தல் ஆணைய புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளில் மட்டும் 1324 புதிய கட்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.
கடந்த 2012 நவம்பர் 26-ல் ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்டது. இந்தக் கட்சி 2013 டிசம்பரில் நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது.
ஆம் ஆத்மியின் இந்த வெற்றியைத் தொடர்ந்து ஏராளமான புதிய கட்சிகள் புற்றீசல்போல் முளைத்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.