இந்தியா

மது போதையில் வாகனம் ஓட்டுபவர் மனித வெடிகுண்டுக்கு சமம்: டெல்லி நீதிமன்றம்

பிடிஐ

குடித்துவிட்டு மது போதையில் வாகனம் ஓட்டும் நபர் பல உயிர்களை பறிக்கும் மனித வெடிகுண்டுக்குச் சமமானவர் என டெல்லி நீதிமன்றம் ஒன்று கருத்து தெரிவித்துள்ளது.

டெல்லி குலாபி நகரைச் சேர்ந்தவர் ரோஹித் பார்கவ். இவர் கடந்த மாதம் குடிபோதையில் வாகனம் ஓட்டியபோது பிடிபட்டார். அவரிடம் லைசன்ஸ் இல்லை. மேலும் வாகனத்துக்கான இன்சூரன்ஸும் இல்லை. இந்நிலையில் மோட்டார் வாகனச் சட்டத்தின்படி அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அவருக்கு விசாரணை நீதிமன்றம் கடந்த மாதம் 5-ம் தேதியன்று 3 நாட்கள் சிறைத் தண்டனையும், ரூ.3,600 அபராதமும் விதித்தது. இந்நிலையில் ரோஹித் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து செசன்ஸ் நீதிமன்றத்துக்குச் சென்றார்.

ரோஹித் வழக்கை விசாரித்த செசன்ஸ் நீதிமன்றம் அவருக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய 3 நாட்கள் சிறைத் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.

வழக்கை விசாரித்த கூடுதல் செசன்ஸ் நீதிபதி லோகேஷ் குமார் ஷர்மா, "இந்த வழக்க்கில் குற்றவாளி ரோஹித் பார்கவுக்கு இரக்கம் காட்ட இடமில்லை. விசாரணை நீதிமன்றத்தால் ஏற்கெனவே வழங்கப்பட்ட 3 நாள் சிறைத் தண்டனையை இந்த நீதிமன்றம் உறுதி செய்கிறது.

எனது பார்வையில், குடித்துவிட்டு மது போதையில் வாகனம் ஓட்டும் நபர் பல உயிர்களை பறிக்கும் மனித வெடிகுண்டுக்குச் சமமானவர். அவர் ஒரு வேளை விபத்து ஏற்படுத்தியிருந்தால் உயிர் பலி ஏற்பட்டிருக்கலாம். எனவே, அவரது தண்டனையை ரத்து செய்ய வாய்ப்பில்லை" என்றார்.

SCROLL FOR NEXT