சேவை வரியை 14%-க்கு மத்திய அரசு அதிகரித்துள்ளதால் மொபைல், ஹோட்டல்களில் உணவு எடுத்துக் கொள்வது, விமான, மற்றும் ரயில் பயண செலவுகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சேவை வரி 12.36%-லிருந்து 14% ஆக இன்று முதல் அதிகரிக்கப்பட்டதால் தனிநபர் செலவினங்கள் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
இந்த சேவை வரி உயர்வினால் அதிக வரிகளை ஈர்க்கும் முக்கியமான சேவைத்துறைகளில் கீழ் வருவனவும் அடங்கும்:
ரயில் பயணம், விமானப்பயணம், வங்கிச்சேவை, காப்பீடு, விளம்பரம், கட்டுமானம், கிரெடிட் கார்டுகள், நிகழ்ச்சித் தயாரிப்புகள், மற்றும் பயண ஏற்பாட்டு நிறுவனங்கள் ஆகிய சேவைகளில் அதிக வரி சுமத்தப்படும்.
மொபைல் சேவை நிறுவனங்களும் கிரெடிட் கார்டு நிறுவனங்களும் ஏற்கெனவே தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை வரி உயர்வினால் கட்டண உயர்வு குறித்த தகவல்களை அனுப்பத் தொடங்கி விட்டன.
சேவை வரியை 14% ஆக அதிகரிப்பதன் மூலம் எதிர்காலத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போது எளிதாக இருக்கும் என்று அருண் ஜேட்லி ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
சரக்கு மற்றும் சேவை வரித்திட்டம் நடைமுறைக்கு வந்தால், அது சேவை வரி மற்றும் பிற உள்ளூர் வரிகளையும் உள்ளடக்கியதாக அமையும். ஒருங்கிணைந்த வரித்திட்டம் நாடு முழுதும் தேவை என்ற காரணத்துக்காக இத்திட்டம் அமல் செய்யப்படுவதாக அருண் ஜேட்லி தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுருந்தார்.
அதே பட்ஜெட் உரையில் சில தேர்ந்தெடுக்கப்பட்ட சேவைகளின் மீது தூய்மை இந்தியா திட்டத்துக்காக 2% வரி விதிக்கப்படும் திட்டத்தையும் அருண் ஜேட்லி முன்மொழிந்தார். ஆனால் இது குறித்து இதுவரை அரசு அறிவிக்கை எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.