மேற்கு வங்கத்தில் மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அதில் தேவையற்ற பொருட்கள் எதுவும் இருப்பதாக கண்டறிப்படவில்லை என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, "இதுவரை சோதனை மேற்கொண்ட வரையில், எந்த நூடுல்ஸ் பாக்கெட்டுகளிலும் தேவையில்லாத பொருட்கள் அல்லது அபாயகரமான ரசாயானம் இருப்பதாக தெரியவில்லை. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி சோதனைகள் பல்வேறு கட்டமாக நடத்தப்படுகின்றன" என்றார்.
நெஸ்லே நிறுவன தயாரிப்பான மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாக ரசாயன உப்பு கலந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை பெற்று ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இதுவரை குஜராத், டெல்லி, ஜம்மு காஷ்மீர், உத்தரப் பிரதேசம், கேரளா, தமிழகம் என தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் நூடுல்ஸ் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.