ஜிதேந்தர்சிங் தோமர் பெற்றதை போல், மேலும் ஆறு ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏக்கள் போலி சட்டக்கல்வி சான்றிதழ் பெற்றதாக சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்து விசாரிக்க டெல்லி போலீஸ் மற்றும் திலக் மாஞ்சி பாகல்பூர் பல்கலைகழகம் சார்பில் இரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளன.
உபியின் பைசாபாத்தில் உள்ள அவத் பல்கலைகழகத்தில் பி.எஸ்.சி மற்றும் பிஹாரின் திலக் மாஞ்சி பாகல்பூர் பல்கலைகழகத்தில் சட்டக் கல்வி பயின்றதாகக் கூறி போலி சான்றிதழ் பெற்ற புகாரில், ஜூன் 9-ல் கைதாகி இருப்பவர் ஜிதேந்தர்சிங் தோமர்.
டெல்லியின் சட்ட அமைச்சராக இருந்தவரது வழக்கை பிஹார் சென்று விசாரித்த டெல்லி போலீஸாரிடம் சில தஸ்தாவேஜ்கள் கிடைத்துள்ளன.
அதில், தோமர் பெற்ற அதே வழியில் பாகல்பூர் பல்கலைகழகத்தில் மேலும் ஆறு எம்.எல்.ஏக்கள் சட்டக்கல்வி சான்றிதழ் பெற்றதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதை விசாரிக்க டெல்லி போலீஸார் தனியாக ஒரு குழு அமைத்துள்ளது.
இது குறித்து ‘தி இந்து’விடம் தோமர் வழக்கை விசாரித்து வரும் டெல்லி போலீஸ் குழுவினர் கூறுகையில், "இந்த ஆறு எம்.எல்.ஏக்களுடன் சேர்த்து தோமரின் போலி சான்றிதழையும் ஒரே நபர் பெற்று தந்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
சுமார் 40 வயது மதிக்கத்தக்க அந்த நபர் டெல்லியின் ரோஹிணி பகுதியில் கல்வி பயிற்சி மையம் நடத்தி வரும் ஒரு பெண் ஆவார். இவர், தோமர் விவகாரம் எழுந்த நாளில் இருந்து தலைமறைவாகி உள்ளார். இவர் அகப்பட்டால் முழு உண்மை தெரிய வரும் என அப்பெண்ணை தீவிரமாக தேடி வருகிறோம்" எனக் கூறுகின்றனர்.
இந்த குறிப்பிட்ட பயிற்சி மையத்திற்கு தோமர் அடிக்கடி சென்று வந்ததாக கிடைத்த தகவலிலும் இந்த ஆறு பேரின் விவகாரம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
இந்த விவகாரத்தில் பாகல்பூர் பல்கலைகழகத்தின் சார்பிலும் ஒரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் இணை துணைவேந்தரான ஏ.கே.ராய் தலைமையில் அமைந்துள்ள இக்குழுவில் பல்கலையின் பாதுகாப்பு அதிகாரி மகேந்தர் சிங் மற்றும் மூத்த பேராசிரியர் அசுதோஷ் பிரசாத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதனிடையே, ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலக்கப்பட்ட அதன் முன்னாள் எம்.எல்.ஏவான ராஜேஷ் கர்க், கடந்த 12 ஆம் தேதி காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். இதில், ஆம் ஆத்மி கட்சியின் 12 எம்.எல்.ஏக்களின் சான்றிதழ்கள் போலி எனவும், இதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இத்துடன் அவர், டெல்லி மாநில இலஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு எழுதிய கடிதத்தில், கடந்த 2013 மற்றும் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் அனைவரது கல்விச் சான்றிதழ்கள் மீதும் விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரியுள்ளார்.
ஆனால், தற்போது டெல்லி போலீஸார் மற்றும் பாகல்பூர் பல்கலையின் விசாரணையில் இருக்கும் ஆறு எம்.எல்.ஏக்கள், கர்க் குறிப்பிட்டுள்ள 12 பேர்களில் உள்ளனரா அல்லது அவர்கள் வேறா? என்பது இன்னும் தெளிவாகவில்லை.