பிரபலமான வர்த்தக இணையதளம் ‘மிந்த்ரா’ தனது ஆடைகள் விளம்பரத்தில், தன்பாலின உறவாளர்களான தம்பதியை நடிக்க வைத்துள்ளது. இதற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தியாவில் பிரபல ஆன்லைன் ஷாப்பிங் இணையதளமான மிந்த்ரா, தனது ஆயத்த ஆடைகள் இருப்பு பற்றிய விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. வழக்கமான முறையில் அல்லாமல், விளம்பரத்தில் 2 இளம்பெண்கள் இடம்பெற்றுள்ளனர். தன் பாலின உறவாளர் தம்பதியான அவர்கள் நடித்துள்ளனர். இதற்கு முன் முகம் சுளிக்கும் வகையில் சில விளம்பரங்களை மிந்த்ரா இணையதளம் வெளியிட்டிருந்தாலும் தன்பாலின உறவாளர் தம்பதியின் இந்த விளம்பரத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
தன்பாலின உறவாளர்களை ஏற்றுக் கொள்ளும் மனநிலையை அந்த விளம்பரம் வெளிப்படுத்தி உள்ளது. இதுபோல் விளம்பரத்தில் தன்பாலின உறவாளர்கள் இடம்பெறுவது இதுவே முதல்முறை என்பது இன்னொரு சிறப்பு. இந்த விளம்பரத்தில் இரு பெண்களும் இயல்பாகவே உள்ளனர். வழக்கமான விளம்பரமாக இல்லை. இதில் ஒருவர் ஆணாதிக்கம் நிறைந்தவராகவோ அல்லது பெண்தன்மையை வெளிப்படுத்துபவராகவோ இல்லை.
இரண்டு இளம்பெண்கள் சேர்ந்து வாழ்கின்றனர். அவர்கள் தங்கள் உறவை ஏற்றுக் கொள்கின்றனர். மிக இயல்பாகவும் அழகாகவும் விளம்பரத்தில் விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது. சேர்ந்து வாழும் தன்பாலின உறவாளர் பெண்ணை பார்க்க அவரது பெற்றோர் வருவதாக செல்போனில் தகவல் தெரிவிக்கின்றனர். அதற்காக இரு பெண்களும் அழகாக உடை அணிந்து தயாராகின்றனர்.
பிரபலமான மிந்த்ரா போன்ற வர்த்தக இணையதளம் தன்னுடைய ஆயத்த ஆடைகளை விளம்பரப்படுத்த தன்பாலின உறவாளர் தம்பதியை பயன்படுத்தியது துணிச்சலான முயற்சிதான். இந்த வீடியோ வெளியிட்ட 10 நாட்களில் யூடியூப்பில் 2.5 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இதன்மூலம் தனிப்பட்ட விருப்பங்களுக்கு வாடிக்கையாளர்கள் மரியாதை தந்துள்ளனர் என்பது நிரூபணமாகிறது.