இந்தியா

மனைவி சண்டை போட்டு சென்றதால் நண்பனை நம்பி மோசம் போன டெல்லிவாசி: கடும் போராட்டத்துக்கு பின் வீட்டை மீட்டார்

செய்திப்பிரிவு

மனைவியை நம்பலாமா, நண்பனை நம்பலாமா என்ற கேள்வி எழும்போது, மனைவிக்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை கடும் போராட்டத்துக்குப் பிறகு அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளார் டெல்லிவாசி ஒருவர்.

மேற்கு டெல்லி நகோலியில் வசிப்பவர் மோகிந்தர் சிங். இவருடைய மனைவி கடந்த 2000-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றார். மோகிந்தர் சிங் வசித்த சொந்த வீடு அவருடைய மனைவி பெயரில் திருமணத்தின் போது பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சொத்து பிரச்சினை ஏற்பட்டது. கணவனை பிரிந்து சென்ற பிறகு, வீடு தனக்குதான் சொந்தம் என்று மிரட்டினார் மோகிந்தரின் மனைவி.

இதனால் விரக்தி அடைந்த மோகிந்தர், தன்னுடைய நண்பர் ராஜ் சிங்கிடம் யோசனை கேட்டுள்ளார். அதற்கு, ‘‘மனைவி பெயரில் உள்ள வீட்டை, என் பெயருக்கு மாற்றி பதிவு செய்து கொடு. உங்களுக்குள் (கணவன் -மனைவி) பிரச்சினை தீர்ந்து இருவரும் மனமொத்து ஒன்றாக சேரும் போது, வீட்டை மீண்டும் உன் பெயருக்கு மாற்றி கொடுத்து விடுகிறேன்’’ என்று ராஜ் சிங் யோசனை தெரிவித்துள்ளார்.

அதை நம்பி ராஜ் சிங்கின் பெயருக்கு வீட்டு ஆவணங்களை மாற்றி கொடுத்தார் மோகிந்தர் சிங். சில நாட்கள் கழித்து கோபத்தை மறந்து பிரிந்து சென்ற மனைவி மோகிந்தர் சிங்குடன் வாழ வந்தார். அதன்பின், சொன்னபடி வீட்டு ஆவணங்களை தன் பெயருக்கு மாற்றித் தரும்படி ராஜ்சிங் கிடம் கேட்டார் மோகிந்தர் சிங். அப்போதுதான் அவருடைய உண்மையான குணம் தெரிய வந்தது. வீட்டின் உரிமையை மாற்றிக் கொடுக்க ராஜ் சிங் மறுத்து விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மோகிந்தர், வேறு வழியின்றி கடந்த 2010-ம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மாவட்ட கூடுதல் நீதிபதி காமினி லாவ் வழக்கை விசாரித்தார். இதற்கிடையில், ராஜ் சிங் பெயரில் பதிவு செய்த ஆவணங்களை மோகிந்தர் சிங் ரத்து செய்தார். அதனால் வீடு தனக்கு சொந்தமாகி விடும் என்று நினைத்தார். ஆனால், அதே நீதிமன்றத்தில் மோகிந்தர் சிங்குக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார் நண்பர் ராஜ் சிங்.

4 ஆண்டுகள் வழக்கு தொடர்ந்து நடந்தது. வழக்கு விசாரணையின் போது கணவருக்கு ஆதரவாக அவருடைய மனைவி இருந்தார். மேலும், தான் பிரிந்து வாழ்ந்த போது கணவனை மிரட்டியதாகவும், வீடு தன் பெயரில் இருந்ததால் அவரை காலி செய்ய சொல்லி தொந்தரவு செய்ததாகவும் நீதிமன்றத்தில் மனைவி ஒப்புக் கொண்டார்.

இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்தது. ‘‘நண்பர் ராஜ் சிங்குக்கு நிரந்தரமாக வீட்டின் உரிமையை மாற்றிக் கொடுக்க வேண்டும் என்று மோகிந்தர் சிங் நினைக்கவில்லை. எனவே, வீட்டை அந்த தம்பதிக்கு ராஜ் சிங் திரும்ப கொடுக்க வேண்டும்’’ என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

SCROLL FOR NEXT