இந்தியா

உ.பி.யில் 6 குழந்தைகளுக்கு அபூர்வ நரம்பியல் நோய்: குடியரசுத் தலைவரிடம் கருணைக் கொலைக்கு அனுமதி கோருகிறார் தந்தை

ஆர்.ஷபிமுன்னா

உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ரா வில் அபூர்வ நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள 6 குழந்தைகளை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கும்படி அவர்களின் தந்தை குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஆக்ராவின் காலீத்புரா பகுதி யில் வசிக்கும் 42 வயதான முகமது நசீர், அங்குள்ள இனிப்புக் கடையில் பணியாற்றி வருகிறார். கடந்த 1995-ம் ஆண்டு தபஸ்யூம் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்ட இவருக்கு 8 குழந்தைகள் உள்ளன. இவர்களில் 6 பேருக்கு கடந்த 3 ஆண்டுகளாக அபூர்வ நரம்பியல் நோய் பாதிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் இடுப்புக்கு கீழே உடல் மெல்ல, மெல்ல செயலிழக்கத் தொடங்கியுள்ளது. இதனால் இரு குழந்தைகள் நடக்க முடியாமல் படுத்த படுக்கையாகி விட்டனர். இந்நிலையில் மேலும் 4 குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு படிப்படியாக ஏற்பட்டு வருகிறது. இதில் 3 குழந்தைகள் தங்கள் முட்டிக்கால்களில் நடக்கின்றனர். இவர்களும் விரைவில் படுத்தப் படுக்கையாகி விடுவார்கள் என்பது நசீர் குடும்பத்தினரின் கணிப்பாக உள்ளது.

இவர்களுக்கு சிகிச்சை அளித்த நரம்பியல் மருத்துவர்கள் அந்தக் குழந்தைகளுக்கு அபூர்வவகை நரம்பியல் நோய் ஏற்பட்டுள் ளதாகவும் அதற்கு சிகிச்சை அளிக்க பல லட்ச ரூபாய் செல வாகும் என்றும் கூறியுள்ளனர்.

இவ்வளவு தொகை தம்மால் செலவிட முடியாது என்பதால் 6 குழந்தைகளையும் கருணைக் கொலை செய்ய அனுமதிக்கும்படி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு நசீர் கடிதம் எழுதி யுள்ளார்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் நசீர் கூறும்போது, “முதலில் நடக்க முடியாமல் கஷ்டப்பட்ட குழந்தைகள் தங்கள் கைகளால் சாப்பிட முடியாமலும் போனது. இவர்களை டெல்லி எய்ம்ஸ் உட்பட பல்வேறு மருத்துவமனகளில் காட்டியும் பலனில்லை. மேலும் பாதிப்பு அதிகமாகி குழந்தைகளை கோமா நிலைக்கு தள்ளிவிடும் என்றும் டாக்டர்கள் கூறுகின்றனர்” என்றார்.

நசீரின் மனைவி தபஸ்யூம் ‘தி இந்து’விடம் கூறும்போது, “குழந் தைகள் சிகிச்சைக்காக இதுவரை ரூ.5 லட்சம் செலவிட்டும் பலனில்லை. இவர்களை பார்க்கும் போது எனக்கு தற்கொலை எண்ணம் தோன்றுகிறது. அல்லது அவர்களை கொன்றுவிடலாம் என்றும் தோன்றுகிறது. ஆனால் ஒரு தாயாக இரண்டையுமே செய்ய முடியாமல் தவிக்கிறேன்” என்றார்.

அபூர்வ நோயால் பாதிக்கப்பட்ட 6 குழந்தைகளும் 8 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். நசீரின் மூத்த மகன் மற்றும் கடைசி மகன் மட்டும் நோயிலிருந்து தப்பியுள்ளனர்.

இதனிடையே இந்தச் செய்தி பத்திரிகைகளில் வெளியான பின் நசீருக்கு உதவ ஆக்ரா மாவட்ட நிர்வாகம் முன்வந்துள்ளது. 6 குழந் தைகளும் மருத்துவக் குழுவால் பரிசோதனை செய்யப்பட்டுள் ளனர். நசீருக்கு ஆதார் அட்டை மற்றும் பிபிஎல் அட்டை மூலமாக முடிந்த உதவிகளை செய்ய மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற் கொண்டுள்ளது.

கருணைக்கொலை வழக்கு

உலக அளவில் கருணைக் கொலைகள் இருவகையில் உள்ளன. சிகிச்சையை நிறுத்தி விட்டு ஒருவரை தாமாக இறக்கச் செய்வது ஒருவகை. விஷ ஊசி மூலம் கொல்வது மற்றொரு வகை. முதல் வகை பல நாடுகளிலும், இரண்டாவது வகை ஒருசில நாடுகளிலும் அமலில் உள்ளன. ஆனால், இந்த இரண் டுமே இந்தியாவில் இல்லாத நிலையில், 37 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த மும்பை செவிலியர் அருணா செண் பகாவை கருணைக்கொலை செய்ய உத்தரவிடும்படி கடந்த 2009 டிசம்பரில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை நிராகரித்து உச்ச நீதி மன்ற அமர்வு 2011-ல் தீர்ப்பு வழங்கியது. கருணைக்கொலை குறித்த மற்றொரு வழக்கு 5 நீதி பதிகள் கொண்ட அமர்வு முன் நிலுவையில் உள்ளது.

SCROLL FOR NEXT