மேகி நூடுல்ஸுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி நெஸ்லே இந்தியா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை மும்பை உயர் நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.
மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமான ரசாயன உப்பு மற்றும் காரீயம் கலந்திருப்பது தெரியவந்ததை அடுத்து பல்வேறு மாநிலங்கள் அதற்கு தடை விதித்தன. இறுதியாக, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையமும் நாடு முழுவதும் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடை விதித்தது.
இதையடுத்து மேகி நூடுல்ஸை தயாரிக்கும் நெஸ்லே இந்தியா நிறுவனம், மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதில், ‘‘மேகி நூடுல்ஸின் 9 வகைகளை விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்தி, கடைகளில் உள்ளவற்றை திரும்பப் பெற வேண்டும். அதனை விநியோகிக்கவோ, ஏற்றுமதி செய்யவோ, உற்பத்தி செய்யவோ கூடாது என்று உடனடியாக தடை விதிக்கப்பட்டது.உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் விதி 34-ன்படி, இவ்வாறு உடனடி தடைவிதிப்பதற்கென்று சில வரையறைகள் உள்ளன. அவற்றை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் முறையாக கடைபிடிக்கவில்லை. எனவே, இந்த தடையை நீக்க வேண்டும். மகாராஷ்டிர அரசு விதித்துள்ள தடையையும் நீக்கி உத்தரவிட வேண்டும்” என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனு, மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வி.எம்.கானடே, பி.பி.கோலபவாலா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மக்கள் உடல் நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.எனவே, இப்போதுள்ள நிலையில் தடையை நீக்க முடியாது. எனினும், நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் மனு தொடர்பாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையமும், மகாராஷ்டிர அரசும் இரு வாரங்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு மீண்டும் வரும் 30-ம் தேதி விசாரிக்கப்படும் என்று கூறி, விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.