சர்ச்சைக்குரிய நில மசோதா குறித்து ஆய்வு செய்துவரும் நாடாளுமன்ற கூட்டுக் குழு முன்பு கருத்துகளை முன்வைக்க ஒரு தனியார் நிறுவன பிரதிநிதிக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் மசோதாவில் சில திருத்தங்களை செய்வது தொடர்பாக மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், இந்த அவசர சட்டத்தை சட்டமாக் குவது தொடர்பான மசோதா மக்களவையில் நிறைவேறிய போதும், ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால் மாநிலங்களவையில் நிறைவேற வில்லை. இதையடுத்து நாடாளு மன்ற கூட்டுக்குழுவின் பரிசீல னைக்கு அனுப்பப்பட்டது.
எஸ்.எஸ்.அலுவாலியா தலைமையிலான இக்குழு, சம்பந் தப்பட்டவர்களின் கருத்துகளைக் கேட்பதற்காக 5-வது நாளாக நேற்று கூடியது. இந்தக் கூட்டத்துக்கு ஜனநாயக மறுசீரமைப்புக்கான அமைப்பு, பூமி அதிகார் அந்தோலன், ஸ்ரீ சமயா, விதி சென்டர் பார் லீகல் பாலிசி உள்ளிட்ட சில நிறுவனங்களின் பிரதிநிதிகளும் சட்டப் படிப்பு பயிலும் 2 இளம் மாணவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.
நில மசோதா குறித்து அனை வரும் தங்கள் கருத்துகளை எடுத்து ரைத்தனர். எனினும், மும்பையில் கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ள ஸ்ரீ சமயா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கருத்து தெரிவிக்க முற்பட்டபோது, கூட்டுக் குழுவில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரிகள், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவர் தனது கருத்தை பாதியிலேயே நிறுத்திக் கொண்டார்.
நம்பகத்தன்மை கொண்ட நிறுவனப் பிரதிநிதிகள் தங்கள் கருத்துகளை தெரிவிப்பதில் தவறில்லை. ஆனால், அவர்கள் தங்கள் திட்டங்களை திணிக்க அவர்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என உறுப்பினர்கள் தெரிவித்தனர்.