பெண் உடன்படாமல் பாலியல் பலாத்காரம் நடைபெற முடியாது என சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் தோடா ராம் கூறியிருப்பது உத்தரப் பிரதேசத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் ஆண் - பெண் பாலின பாகுபாடு அதிகமாக இருப்பதாகவும் ஏற்கெனவே பல்வேறு சர்ச்சைகள் நிலவுகின்றன.
இந்நிலையில், சமாஜ்வாதி மூத்த தலைவரான தோடா ராம் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, "பெண் உடன்படாமல் பாலியல் பலாத்காரம் நடக்க முடியாது. பாலியல் பலாத்காரங்கள் நடப்பதாக மக்கள் அரசாங்கத்தின் மீதும் சட்டம் ஒழுங்கு நிலவரம் மீதும் புகார் கூறுகின்றனர். பலாத்காரம் நடைபெறும்போது பெண்ணின் ஒப்புதலுடனேயே நடைபெறுகிறது. ஆனால், அத்தகைய சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்ததுமே அனைவரும் பலாத்காரம் நடந்துவிட்டது என கூக்குரல் இடுகின்றனர்" எனக் கூறியுள்ளார்.