நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றியைத் தொடர்ந்து, ஸ்ரீநகரில் இன்று அக்கட்சி தொண்டர்கள் வெற்றி பேரணி நடத்தினர்.
பெண்கள் உட்பட பலர் பங்கேற்ற இப்பேரணி, ஷேர்-ஈ-காஷ்மீர் பூங்காவில் தொடங்கி பிரதாப் பூங்கா வரை நடைபெற்றது. இது குறித்து, பா.ஜ.க தொண்டர்களில் ஒருவரான ஆயிஷா கூறுகையில், “நரேந்திர மோடி வெற்றி பெற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அவர் ஒருவரால் மட்டுமே காஷ்மீரின் வளர்ச்சியையும் பாதுகாப்பையும் மேம்படுத்த முடியும்” என்றார்.
மேலும், அக்கட்சி ஆதரவாளர்கள் பிரதாப் பூங்காவில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். அக்கட்சியின் மற்றொரு தொண்டரான பஷீர் அஹமத் கூறுகையில் “காஷ்மீர் மாநிலம் வளர்ச்சியில் பின்தங்கி உள்ளதால், இம்மாநிலத்திற்கு சிறப்பு கவனம் தேவைப்படுகிறது. அடல் பிஹாரி வாஜ்பாய் அரசு மேற்கொண்ட திட்டங்களைப் போன்று மோடி அரசு கொண்டுவர வேண்டும் என்று விரும்புகிறோம். எங்கள் மாநிலத்திற்கு சிறப்பு வேலைவாய்ப்பு திட்டங்கள் தொடங்காபடுமானால், மிகவும் உதவிகரமாக இருக்கும்” என்றார்.