மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தனது பதவியை சனிக்கிழமை ராஜினாமா செய்தார்.
பிஹாரில் மொத்தமுள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் பாஜக கூட்டணி 31 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஆளும் ஐக்கிய ஜனதா தளத்துக்கு 2 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இதைத் தொடர்ந்து நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதுகுறித்து பாட்னாவில் நிருபர்களிடம் நிதிஷ்குமார் கூறியதாவது:
மக்களவைத் தேர்தலில் எங்கள் கட்சி தோல்வி அடைந்ததற்கு பொறுப்பு ஏற்று நான் ராஜினாமா செய்துள்ளேன். இனி மற்ற கட்சிகள் அல்லது கூட்டணி கட்சிகள் ஆட்சி அமைத்துக் கொள்ளலாம். சட்டமன்றத்தைக் கலைக்கும்படி நான் பரிந்துரை செய்யவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அடுத்து ஆட்சி அமைப்பது யார்?
பிஹார் சட்டமன்றத்தின் பலம் 243. இதில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு 116, பாஜகவிற்கு 91, ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு 22, காங்கிரஸ் 4, லோக் ஜன சக்தி 3, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்று மற்றும் 6 சுயேச்சைகள் உள்ளனர்.
நிதிஷ் குமாருக்கு 6 சுயேச்சைகள், 4 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், லோக் ஜன சக்தியின் 3 எம்.எல்.ஏக்கள் ஆதரவளித்து வந்தனர். இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் பலர் நிதிஷ் குமார் மீது அதிருப்தியாக இருந்தனர். இவர்கள் ஐக்கிய ஜனதாவை உடைத்து பாஜகவுக்கு தாவ இருப்பதாக செய்திகள் வெளியாகின.
தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பாக நிருபர்களிடம் பேசிய பாஜக பிஹார் மாநிலத் தலைவர் சுசில்குமார் மோடி, ஐக்கிய ஜனதா தளத்தின் ஒரு பகுதி எம்.எல்.ஏ.க்கள் தன்னிடம் தொடர்பில் இருப்பதாக கூறியிருந்தார். இதனால் மக்களவைத் தேர்தலுக்கு பிறகு நிதிஷ்குமாரின் அரசு கவிழும் அபாயம் உள்ளது என்று கடந்த 8- ம் தேதி ‘தி இந்து’வில் செய்தி வெளிவந்தது.
பிஹாரின் தற்போதைய நிலை குறித்து ‘தி இந்து’விடம் ஐக்கிய ஜனதா தள வட்டாரங்கள் கூறுகையில், ‘‘நாளை நடக்க இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மீண்டும் நிதிஷ் குமாரே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக நீடிக்க வாய்ப்புள்ளது. கண்டிப்பாக பாஜகவால் ஆட்சி அமைக்க முடியாது. இதற்காக சட்டமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்’’ என தெரிவித்தன.
ராஜினாமா ஏற்பு
பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் ராஜினாமாவை ஆளுநர் டி.ஒய். பாட்டீல் ஏற்றுக்கொண்டுள்ளார்.