கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் அளிக்க வேண்டிய ரூ.6 ஆயிரம் கோடி நிலுவைத் தொகையை அரசே நேரடியாக அளிக்க முன்வந்துள்ளது. இந்தத் தொகை வட்டியில்லா கடன் தொகையாக சர்க்கரை ஆலைகளுக்கு அளிக்கப்படும்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்தது.
இந்த வட்டியில்லா கடன் தொகையை கரும்பு ஆலைகள் ஓராண்டுக்குள் திரும்ப செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
2013-ம் ஆண்டிலிருந்து மத்திய அரசு இதுவரை சர்க்கரை ஆலைகளுக்கு மூன்று முறை கடன் உதவி அளித்துள்ளது.
நடப்பு கரும்பு அறுவை சீசனில் (அக்டோபர் 2014-செப்டம்பர் 2015) சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 21 ஆயிரம் கோடியாகும். இதில் உத்தரப் பிரதேச மாநில ஆலைகள் மட்டும் அளிக்க வேண்டிய தொகை ரூ. 9 ஆயிரம் கோடியாகும்.
கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய தரைவழி போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
நிலுவைத் தொகையை விவசாயிகள் விரைவாகப் பெற வசதியாக இத்தொகையை வங்கிகள் மூலம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது சர்க்கரை ஆலைகள் அளிக்க வேண்டிய நிலுவை தொகை குறித்த விவசாயிகள் பட்டியலை வங்கிகள் பெற்று வங்கிகள் அத்தொகையை விவசாயிகள் கணக்கில் சேர்க்கும். இதில் எஞ்சியிருக்கும் தொகை அந்தந்த கரும்பு ஆலைகள் கணக்கில் வைக்கப்படும்.
இந்த வட்டியில்லா கடன் தொகையானது விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகையில் குறைந்தபட்சம் 50 சதவீதத்தை அளித்துள்ள சர்க்கரை ஆலைகளுக்கு மட்டும் வழங்கப்படும். இந்த கணக்கீட்டுக்கு ஜூன் 30-ம் தேதி அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்படும்.
கரும்பு விவசாயிகளுக்கு கடன் நிலுவை அதிகரித்தற்கு முக்கிய காரணமே, மத்திய அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் மாநில அரசுகள் நிர்ணயிக்கும் விலை ஆகியவற்றுக்கு இடையிலான இடைவெளிதான்.
மேலும், உள்நாட்டு நுகர்வைக் காட்டிலும் கரும்பு உற்பத்தி அதிகரிப்பும் நிலுவைத் தொகை அதிகரித்ததற்கு முக்கியக் காரணமாகும். கடந்த நான்கு ஆண்டுகளாக சர்க்கரை விலை உயர்த்தப்படவில்லை. சர்வதேச சந்தையில் சர்க்கரை விலை உயரவில்லை. இதனால் சர்க்கரை ஆலைகள் பெரும் கடன் சுமைக்கு ஆளாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.