வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாஜக மூத்த தலைவரான அத்வானிக்கு நெருக்கமானவர் என்பதால் அவரது கட்சியினராலேயே குறி வைக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
கடந்த 1977-ம் ஆண்டு ஹரியாணாவில் கூட்டணி ஆதரவில் அமைந்த ஜனதா கட்சியின் ஆட்சி யில் தனது 25 வயதில் அம்மாநில அமைச்சராகப் பதவி ஏற்றவர் சுஷ்மா ஸ்வராஜ். அடுத்து, ஹரியாணா மாநில பாஜகவின் முதல் பெண் தலைவராகவும், டெல்லியின் முதல் பெண் முதல் அமைச்சராகவும், பாஜகவின் முதல் பெண் செய்தி தொடர்பாளராகவும் பொறுப்பேற்று சாதனை படைத்தார்.
இந்தப் பதவிகள், மூத்த தலைவர் அத்வானி மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (ஆர்.எஸ்.எஸ்) இவருக்கு அளித்த ஆதரவால் கிடைத்ததாகக் கூறப்படுவது உண்டு. கடந்த முறை இருந்த காங்கிரஸ் ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த அத்வானி, முக்கிய விஷயங்களில் சுஷ்மாவிடம் ஆலோசனை பெற்று வந்தார். இவர் சுஷ்மாவை மிகவும் செல்லமாக, `மகளே’ என்றே அழைத்து வந்தார்.
மக்களவைத் தேர்தலில், பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்தர மோடி முன்னிறுத்தப்பட்ட போது அவரை எதிர்த்த மூத்த தலைவர்களில் சுஷ்மாவும் ஒருவ ராக இருந்தார். எனினும், தமது வெற்றிக்குப் பின் சுஷ்மாவை, வெளியுறத்துறை அமைச்சராக்கி கவுரவித்தது மோடியின் ராஜதந்திரத்தைக் காட்டுவதாகக் கருதப்பட்டது.
ஆனால், தாம் அமைச்சரானது முதல் மோடி அரசுக்கு ஆதரவாக சுஷ்மா ஊடகங்களிடம் அதிகம் பேச வில்லை எனக் கூறப்படுகிறது. கடந்த மாதம் முடிந்த மோடி ஆட்சியின் ஒரு வருட சாதனைகளையும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி மற்ற அமைச்சர்களை போல் சுஷ்மா பொதுமக்களுக்காக பட்டியலிட வில்லை எனவும் ஒரு அதிருப்தி நிலவி இருந்தது. இதனால், லலித் மோடி விவகாரத்தில் சுஷ்மாவின் செயலை அவரது கட்சியினரே வெளிப்படுத்தியதாக ஒரு புகார் எழுந்துள்ளது.
இது குறித்து `தி இந்து’விடம் பாஜக நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, `தான் பதவி ஏற்றது முதல் தனது அமைச்சகத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க முடியாத நிலை சுஷ்மாவுக்கு நிலவியது. தொடர்ந்து அதிகரித்த கருத்து வேறுபாடே இதற்கு காரணம். இதனால் தான், மியான்மரில் புகுந்து தாக்குதல் நடத்திய விவகாரத்தில் ஒரு வெளியுறத்துறை அமைச்சராக சுஷ்மாவை விளக்கம் அளிக்க விடாமல், பாதுகாப்புத் துறை அமைச்சரான மனோகர் பாரிக்கருக்கு வாய்ப்பளிக்கப்பட் டது. இதன் காரணமாக மிகவும் அதிருப்தி அடைந்த சுஷ்மா இதை, கட்சியின் சில முக்கிய தலைவர்க ளிடம் வெளிப்படுத்தி இருந்தார். இதை தொடர்ந்து லலித் மோடி விவகாரம் வெளியானதை வைத்து நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும்” என்றனர்.
இந்த விவகாரத்தில் சிக்கிய ராஜஸ்தானின் முதல் அமைச்சரான வசுந்தரா ராஜேவும் அத்வானி ஆதரவாளர் எனக் கூறப்படுகிறது. எனினும், இவருக்கு லலித் மோடியுடன் சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக இருந்த குடும்ப ரீதியான நட்பு காரணமாக சிக்கியுள்ளார் எனக் கருதப்படுகிறது.