மதர் டெய்ரி பாலில் டிடர்ஜென்ட் பவுடர் இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் மாதிரிகளை மறுசோதனைக்காக கொல்கத்தாவுக்கு அனுப்பியுள்ளதாகவும், சோதனை முடிவுகளை எதிர்நோக்கியுள்ளதாகவும் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எஸ்.நாகராஜ் தெரிவித்துள்ளார்.
டெல்லியை மையமாகக் கொண்ட மதர் டெய்ரிஸ் பால் பாக்கெட் மாதிரிகளில் டிடர்ஜென்ட் பவுடர் இருப்பது சோதனையின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உத்தரப் பிரதேசத்தின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) அதிகாரி ராம் நரேஷ் யாதவ் நேற்று (செவ்வாய்கிழமை) பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்திருந்தார்.
அவர் பிடிஐ-யிடம் "மதர் டெய்ரிஸ் பால் பாக்கெட்டுகள் மாதிரிகள் கடந்த நவம்பர் 2014-ல் பாஹ் பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்டது. முதலில் லக்னோவில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று கொல்கத்தாவுக்கு மாதிரி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது" என்றார்.
இந்நிலையில், மதர் டெய்ரி பால் பாக்கெட் மாதிரிகளில் டிடர்ஜெண்ட் பவுடர் இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் மாதிரிகளை மறுசோதனைக்காக கொல்கத்தாவுக்கு அனுப்பியுள்ளதாகவும் சோதனை முடிவுகளை எதிர்நோக்கியுள்ளதாகவும் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எஸ்.நாகராஜ் தெரிவித்துள்ளார்.
கலப்பட குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்துவரும் அந்நிறுவனம், மதர் டெய்ரி பால் 4 விதமான சோதனைக்கு உட்படுத்தப்படுவதால் கலப்படத்துக்கு வாய்ப்பே இல்லை எனத் தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.