மத்திய அரசு ஊழியர்களை டெல்லி மாநில அரசின் லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்யும் அதிகாரத்தை பறிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த 2 சுற்றறிக்கைகளுக்கு தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இது தொடர்பாக சுதீர் அசோசியேட்ஸ் என்ற சட்ட நிறுவனம் தொடர்ந்த பொதுநல வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தின் விடுமுறைக் கால அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மத்திய அரசின் இந்த சுற்றறிக்கைகள் ஊழல் செய்பவர்களை பாதுகாக்கும் வகையில் உள்ளது. மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்த அதிகாரம் உள்ளது” என வாதிட்டார்.
அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலி சிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின், “இது தொடர்பான வழக்கை ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தின் ரெகுலர் அமர்வு விசாரித்து வருகிறது. எனவே இம்மனுவை விடுமுறைக்கால அமர்வு விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மத்திய அரசின் சுற்றறிக்கைகளுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்தனர். இந்த விவகாரத்தில் ஏற்கெனவே சட்டக் கல்லூரி மாணவர் தொடர்ந்த வழக்குடன் இந்த மனுவை சேர்க்க உத்தரவிட்டனர்.