இந்தியா

காஷ்மீரில் பிந்தரன்வாலே சுவரொட்டிகளை அகற்றியதால் சர்ச்சை: சீக்கியர்கள் வன்முறையை தடுக்க கூடுதல் படைகள் குவிக்கப்படும் - மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்

ஏஎன்ஐ, பிடிஐ

காஷ்மீரில் சீக்கியர்கள் வன்முறையில் ஈடுபடுவதை தடுக்க கூடுதல் படைகள் குவிக்கப்படும் என்று பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று கூறினார்.

காலிஸ்தான் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் மறைந்த ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே படங்களுடன் ஜம்முவில் சுவ ரொட்டிகள் ஒட்டப்பட்டன. அதை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வியாழக்கிழமை சீக்கியர் கள் போராட்டம் நடத்தினர். அப் போது வன்முறையில் ஈடுபட்ட சீக்கியர்களை கலைக்க, போலீஸார் தடியடி நடத்தினர். இதனால் ஜம்மு வில் உள்ள சட்வாரி பகுதியில் போலீ ஸாருக்கும் சீக்கியர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவர் இறந்தார். 25 பேர் காயம் அடைந்தனர். மேலும் ஜம்மு - பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் சீக்கியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அங்கு பதற்றம் நிலவுகிறது.

இதுகுறித்து பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காஷ்மீரில் சீக்கியர்கள் வன் முறைகளில் ஈடுபடுவது துரதிருஷ்ட வசமானது. வன்முறையை தடுக்க கூடுதல் படைகள் குவிக்கப்படும். இதுகுறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து ஆலோ சனை நடத்தினேன். காஷ்மீரில் அமைதியை நிலைநிறுத்த தேவை யான அனைத்து உதவிகளையும் செய்வதாக ராஜ்நாத் உறுதி அளித் துள்ளார். அத்துடன் காஷ்மீர் அரசுடன் அவர் தொடர்ந்து பேசி நிலைமையை கண்காணித்து வருகிறார்.

வன்முறையைக் கட்டுப்பாட் டுக்குள் வைத்திருக்க, கூடுதல் போலீஸாரை அனுப்பி வைக்க ராஜ்நாத் சிங் அறிவுறுத்தி உள்ளார். மாநிலத்தில் எல்லா பிரிவினரும் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் வேண்டு கோள் விடுத்துள்ளார். இவ்வாறு ஜிதேந்திர சிங் கூறினார்.

ஒமர் அப்துல்லா கண்டனம்

காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, ட்விட்டர் பக்கத்தில் நேற்று கூறியிருப்பதாவது:

காஷ்மீரில் பாகிஸ்தான் நாட்டின் கொடியை ஏந்தி ஊர்வலம் செல்கின்றனர். ஜம்முவில் காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்தின் பிந்தரன்வாலேவின் படத்துடன் சுவரொட்டிகள் ஒட்டுகின்றனர். இது பிராந்திய அளவில் சமநிலை இல்லாததையே காட்டுகிறது.

மோடியும் -முப்தியும் (பாஜக - மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி அரசு), காஷ்மீரில் கூட்டணி ஆட்சி அமைத்த போது, இந்த பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவோம் என்று உறுதி அளித்தனர். ஆனால், நடக்கும் சம்பவங்கள் அப்படி இல்லை.இவ் வாறு ஒமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT