மோடி அரசு, சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் முந்தைய அரசின் முடிவை திரும்பப்பெற தீர்மானித்திருப்பது வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முக்கியமான இரு கொள்கை முடிவுகளை எடுத்திருக்கிறது.
வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்பதற்காக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி எம்.பி. ஷா தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டிருப்பது, சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் முந்தைய அரசின் முடிவை திரும்பப்பெற தீர்மானித்திருப்பது ஆகிய நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை.
சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதையும், பெரு நிறுவனங்கள் சில்லறை வணிகத்தில் ஈடுபடுவதையும் பாட்டாளி மக்கள் கட்சி தொடக்கத்திலிருந்தே எதிர்த்து வந்திருக்கிறது.
"சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீடுக்கு அனுமதி அளிக்கப்படுவதால் சிறு மற்றும் நடுத்தர வணிகர்களும், சிறு விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே, சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீடு தடுக்கப்படும்" என மத்திய தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் சில்லறை வணிகத்தையே நம்பியுள்ள கோடிக்கணக்கான பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டிருக்கிறது.
இது இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராடி வந்த பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளுக்கும், வணிகர் சங்கங்களுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.
வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் முதலீடு செய்துள்ள கறுப்புப் பணத்தின் மதிப்பு 30 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பணம் இந்தியாவுக்கு மீட்டு வரப்பட்டால், நாட்டின் பொருளாதாரம் புதிய உத்வேகம் பெறும். எனவே, கறுப்புப் பணத்தை மீட்பதற்காக தொடங்கிய நடவடிக்கைகளை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்". இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.