டெல்லியில் துணை நிலை ஆளுநரால் ஊழல் தடுப்பு அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரி, அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ளக்கூடாது என ஊழல் கண்காணிப்பு இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங், டெல்லி ஊழல் தடுப்பு அமைப்பின் (ஏசிபி) தலைவராக டெல்லி காவல்துறை இணை ஆணையர் முகேஷ் மீனாவை நியமித்து உத்தரவிட்டார்.
இதற்கு கேஜ்ரிவால் அரசு எதிர்ப்புத் தெரிவித்தது. ஏற்கெனவே கேஜ்ரிவால் அரசுக்கும் துணை நிலை ஆளுநருக்கும் இடையே இருந்த மோதல் வலுத்தது.
இந்நிலையில் ஆளுநரால் நியமிக்கப்பட்ட முகேஷ் மீனாவுக்கு டெல்லி ஊழல் தடுப்பு இயக்குநர் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ‘ஊழல் தடுப்பு அமைப்பில் ஒரே ஒரு கூடுதல் ஆணையர் தர நிலையிலான பதவி மட்டுமே உள்ளது. அந்தப் பணியிடம் தற்போது காலியாக இல்லை.
எனவே, நீங்கள் (மீனா) உங்களுடைய டெல்லி காவல்துறை பணிக்கே திரும்ப வேண்டும்’ என உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்லி ஊழல் தடுப்பு அமைப்பு டெல்லி அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாக டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், துணை நிலை ஆளுநர் நீதிமன்றத்தை அவமதிக்கும் விதத்தில் அதிகாரியை நியமித்து உத்தரவிட்டுள்ளார் என ஆம் ஆத்மி அரசு குற்றம்சாட்டி யுள்ளது.
துணை முதல்வர் மணீஷ் சிசோதியா, “இணை ஆணையர் நியமனத்தில் இவ்வளவு அவசரம் ஏன். ஒரு நபருக்குச் சாதகமா இரவோடு இரவாக பொறுப்பேற்க உத்தரவிட்டது ஏன்? என கேள்வியெழுப்பியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் ஜன்தர் மந்தரில் ஆம் ஆத்மி நடத்திய போராட்டத்தின்போது விவசாயி ஒருவர் மரத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அப்பிரச்சினையில் தன்னை சிக்க வைக்க முகேஷ் மீனா முயற்சி செய்வதாக, மணீஷ் சிசோதியா குற்றம்சாட்டியுள்ளார்.