இந்தியா

ஆறு மாதங்களாக சகோதரியின் எலும்புக்கூடுடன் வாழ்ந்தவர் மனநல மருத்துவமனையில் அனுமதி

செய்திப்பிரிவு

கொல்கத்தாவில் 6 மாதங்களாக தனது சகோதரியின் எலும்புக்கூடுடன் ஒருவர் வாழ்ந்து வந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து போலீஸ் இணை ஆணையர் காந்தி கோஷ் கூறும்போது, "தெற்கு கொல்கத்தாவின் ராபின்சன் லேக் பகுதியில் வசித்து வருபவர் பார்த்தா டே. அவருடன் அவரது தந்தை அரவிந்த டே வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த புதன் கிழமை அவரது வீட்டிலிருந்து நெருப்பும், புகையும் வர அண்டை வீட்டார் போலீஸுக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து போலீஸார் வீட்டில் சோதனை மேற்கொண்டபோது குளியலறையில் 70 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் கிடைத்தது. எரிந்த நிலையில் இருந்த அந்த பிரேதத்தை போலீஸார் கைப்பற்றினர். மேலும் அங்கிருந்து ஒரு தற்கொலை குறிப்பும் கைப்பற்றப்பட்டது.

வீடு முழுவதும் சோதனை செய்தபோது ஒரு அறையில், ஒரு பெண்ணின் எலும்புக்கூடும், இரண்டு நாய்களில் எலும்புக்கூடும் இருந்தன. பெண் கடந்த டிசம்பர் மாதமும், இரண்டு நாய்களும் கடந்த ஆகஸ்ட் மாதமும் இறந்திருக்க வேண்டும் எனத் தெரியவந்துள்ளது.

இது குறித்து பார்த்தா டே கூறும்போது, "எங்கள் வீட்டின் நாய்கள் இறந்துபோயின. இதனால் மனமுடைந்த என் சகோதரி தேப்ஜானி டே பட்டினி இருந்து இறந்தார்" என்றார்.

நாய்கள் சடலத்துடன் தனது சகோதரியின் சடலத்தையும் ஒரு அறையில் பதுக்கிய பார்த்தா, அந்த அறையில் இருந்து துர்நாற்றம் வெளியேறாத வகையில் அறை முழுவதையும் சீல் செய்துள்ளார். அவ்வப்போது எலும்புக்கூடுகளுக்கு உணவு வைக்கும் பழக்கத்தையும் கொண்டிருக்கிறார்.

பார்த்தா மீது யாரும் புகார் தெரிவிக்காத நிலையில் அவரை மனநல மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம்" என்றார்.

பார்த்தா கடந்த 2007-ல் டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் பார்த்துவந்த வேலையைத் துறந்தார்.

SCROLL FOR NEXT