நடப்பு ஆண்டில் பருவ மழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்ய வாய்ப்பில்லை என்று கூறப்படுவதையடுத்து, சவாலை, வாய்ப்பாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிரதமர் கிரிஷி சின்ச்சாய் யோஜனா குறித்த சந்திப்பில் தலைமை வகித்த மோடி பருவ மழை எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் போனாலும் சவாலை வாய்ப்பாக உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும், புதிய பாசன முறைகளை நோக்கி அடியெடுத்து வைக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் அலுலவகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு மழை இருக்காது என்று வானிலை ஆய்வு மையங்கள் கணித்துள்ளதையடுத்து, "குறைந்த மழை என்ற சவாலை, வாய்ப்பாக கருத வேண்டும்" என்று பிரதமர் கேட்டு கொண்டுள்ளார்.
மேலும் பாசனத்துறையில் நிர்வாக நிலவரங்கள், நிதிநிலை ஏற்பாடுகள், மற்றும் தொழில்நுட்ப செயல்பாடு ஆகியவற்றை மறு ஆய்வுக்குட்படுத்தி, ஒட்டுமொத்தமான தீர்வு நடைமுறைகளுடன் விவசாயிகளுக்கு விரைவில் பலன்கள் ஏற்பட வழிவகைச் செய்யப்படும் என்று கூறினார்.
நாடு முழுதும் தீவிரமாக குறுகிய கால ஏற்பாடாக வேளாண் நீர்நிலைகளை உருவாக்கவும் அவர் வழிகாண வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மாவட்ட மட்டத்தில் பாசன வழிமுறைகளை செயலாக்க வேண்டும், இது தொடர்பாக மாவட்ட அளவில் பாசனத் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் முன்மொழிய கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும், நாடு முழுதும் கையாளப்படும் மரபான பாசன முறைகளை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று கோரிய பிரதமர், இது குறித்த பாசன கொள்கை வரைதலில் நாடு முழுதும் உள்ள இளம் ஆய்வாளர்கள் ஈடுபடவேண்டும் என்று வலியுறுத்தினார்.
நிலத்தடி நீரின் அளவு சில மாநிலங்களில் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் பயிர் செய்தல் முறையில் மாற்றங்கள் தேவை என்பதை வலியுறுத்திய மோடி, மக்காச்சோளம் பயிரில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும், அதற்கு மதிப்பு கூடுமாறு முயற்சிகள் மேற்கொள்வதின் அவசியம் ஆகியவற்றையும் மோடி வலியுறுத்தினார்.
இந்தச் சந்திப்பில், நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சவுத்ரி பிரேந்திர சிங், வேளாண் துறை இணை அமைச்சர் சஞ்சீவ் பல்யான், ஆகியோருடன் இந்தத்துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்”
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.