தெலங்கானா மாநிலத்தில் வரும் அடுத்த மாதம் 25 ஆயிரம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தெலங்கானா முதலாமாண்டு விழாவில், அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ் வாக்குறுதி அளித்துள்ளார்.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிந்து தெலங்கானா மாநிலம் உதயமாகி நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றது. தெலங்கானா நிறுவன நாளையொட்டி மாநிலம் முழுவதும் விழாக் கோலம் பூண்டிருந்தது. பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றன.
இவ்விழாவையொட்டி ஹைதரா பாத்தில் உள்ள தெலங்கானா தியாகிகள் நினைவு சின்னத்துக்கு முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஹைதராபாத்தில் உள்ள காவல் துறை பயிற்சி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் தேசியக் கொடியை ஏற்றி விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:
பலரது உயிர் தியாகத்தாலும், பல்வேறு போராட்டங்களாலும் உருவானதுதான் தெலங்கானா. தனி தெலங்கானா மாநிலம் உருவானால் கஷ்டப்பட வேண்டியிருக்கும் என பலர் அச்சம் தெரிவித்தனர். ஆனால், சில மாதங்களிலேயே மின்சார பிரச்சினையை சமாளித்தோம். வரும் 2018-ம் ஆண்டுக்குள், தெலங்கானாவில் 24 மணி நேரமும் தடையில்லா, தரமான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அடுத்த மாதம் 25 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும். வீடு இல்லாத ஏழைகளுக்கு முதற்கட்டமாக, 2 படுக்கை அறை கொண்ட 50 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும். ரூ.35 ஆயிரம் கோடியில் பாலமூரு அணை கட்டும் திட்டம் தொடங்கப்படும்.
அரசு ஊழியர்களுக்கு 43 சதவீதமும், போக்குவரத்து ஊழியர்களுக்கு 44 சதவீதமும் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல, ஊர்க்காவல் படையினர், அங்கன்வாடி ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ரூ.17 ஆயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.20 ஆயிரம் கோடியில் சாலைகள் மேம்பாட்டுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் கே. சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தெலங்கானா மாநில அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள், பொது மக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.